
சென்னை: ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, அதைப் பதப்படுத்தி, பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்கிறது.
மேலும், வெண்ணெய், நெய்,தயிர், பால்கோவா உள்ளிட்ட 225வகையான பால் பொருட்களைத் தயாரித்து, ஆவின் பாலகங்கள்மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது. இவற்றில், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.
இந்நிலையில், ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.14-க்கு விற்கப்பட்ட 15 மி.லி. நெய் பாக்கெட் ரூ.15, ரூ.70-க்கு விற்கப்பட்ட 100 மி.லி நெய் பாக்கெட் ரூ.80, ரூ.145-க்கு விற்கப்பட்ட 200 மி.லி நெய் பாட்டில் ரூ.160, ரூ.315-க்குவிற்பனை செய்யப்பட்ட அரை லிட்டர் நெய் பாட்டில் ரூ.365, ரூ.630-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.700 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோல, ரூ.55-க்கு விற்கப்பட்ட 100 கிராம் வெண்ணெய் ரூ.60,ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்ட500 கிராம் வெண்ணெய் ரூ.275 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரை கிலோ உப்பு வெண்ணெய் ரூ.15 உயர்த்தப்பட்டு, ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி வருகிறது.ஆவின் பால் பொருட்கள் விலையை மீண்டும் மீண்டும் உயர்த்தி, மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் நெருங்கும் சூழலில், நெய், வெண்ணெய் விலையை உயர்த்தியிருப்பது, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் அமையும். எனவே, பொதுமக்களைப் பாதிக்கும் இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 4-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.515-ஆக இருந்த ஒரு கிலோ நெய்யின் விலை தற்போது ரூ.185 உயர்த்தப்பட்டு ரூ.700 ஆகியுள்ளது.
இது 36 சதவீத உயர்வாகும். மக்களின் நலனைக் கருதி, ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் பால் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும். இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.