ஆவணி மாத முகூர்த்தம் தொடங்கியுள்ளதால் வைகை அணைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாய் அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இது வடகரை, தென்கரை என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இடது கரையில் சிறுவர்கள் பூங்கா, பல்வேறு வகையான சிலைகள், செயற்கை நீரூற்று உள்ளிட்டவையும், வலது கரையில் இசை நீரூற்று, மாதிரி அணை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன.
நுழைவுக் கட்டணம் ரூ.5. மினி ரயிலில் பயணிக்க ரூ.6-ம், குழந்தைகளுக்கு ரூ.3-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் பூங்கா நீர்த்தேக்கத்தில் உள்ள படகுகளில் ஒரு மணி நேரம் பயணிக்க இருவருக்கு ரூ.90 கட்டணம் பெறப்படுகிறது.
அணையைச் சுற்றிப் பார்க்க காலை 6 முதல் மாலை 6 மணி வரையும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இரவு 8 மணி வரையும் அனுமதி உண்டு.
கோடை விடுமுறைக்குப் பின்பு கடந்த சில மாதங்களாக இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆவணி மாத முதல் முகூர்த்தம் தொடங்கியது. அன்று மாவட்டத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. நேற்றும் முகூர்த்த நாள் என்பதால் மண்டபகங்கள் களைகட்டின.
தேனி மாவட்டத்தைப் பொருத்தளவில் திருமணம், திருவிழா போன்றவற்றுக்கு வரும் உறவினர்கள் பலரும் வைகை அணை போன்ற இடங்களுக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் கடந்த 2 நாட்களாக வைகை அணையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அணையின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்ததுடன் குழந்தைகளைப் பூங்காக்களில் விளையாட வைத்தும் மகிழ்ந்தனர்.
இது குறித்து ஆண்டிபட்டி அருகேுயள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்த மகேந்திரகனி கூறுகையில், உறவினர்களின் திருமணத்துக்குப் பேரன், பேத்திகள் வந்திருந்தனர். அவர்களுடன் அணையைச் சுற்றிப் பார்க்க வந்தேன். பெரிய இடமாக இருப்பதுடன், ஊஞ்சல், சறுக்கல் போன்றவையும் உள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பொழுதைப் போக்கினர், என்றார்.