ராஜமுந்திரி: ஆந்திராவில் திறன் மேம்பாடு நிதி ஊழல் வழக்கில், ராஜமுந்திரி மத்திய சிறையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நீதிமன்ற காவலில் உள்ளார். அவரை சந்தித்து விட்டு வெளியே வந்த நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவிக்க மட்டுமே இங்கு வந்தேன். ஆனால், அரசியலில் 40 ஆண்டுகால அனுபவம், 14 ஆண்டுகள் முதல்வராக இருந்தவருக்கே இந்த கதி என்றால், சாதாரண ஆந்திர மக்களின் நிலை குறித்து எண்ணி பார்த்தேன். ஆதலால், வரும் 2024-ல் நடைபெற உள்ள சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவெடுத்துள்ளேன்.
கடந்த நாலரை ஆண்டுகளாக ஆந்திராவில் அராஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அது இனியும் தொடரக்கூடாது. இந்த அராஜக ஆட்சிக்கு எதிரான சமூக போரில் தெலுங்கு தேசத்துடன் இணைந்து போராட ஜன சேனா தயாராகி விட்டது. அராஜக சக்திகளிடமிருந்து மக்களை காக்கும் போரில் பாஜகவும் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது.
எனக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஜெகன் அரசை வீட்டுக்கு அனுப்புவதில் எங்களிடையே மாற்று கருத்தே கிடையாது. அமலாக்கத் துறையினர் விசாரிக்க வேண்டியதை சிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த வழக்கை போட்டுள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என்ன உத்தமரா? இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.