சென்னை: ஆதித்யா விண்கலத்தின் ஏபெக்ஸ்கருவி சேகரித்த ஆய்வுத் தரவுகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம்ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது பல்வேறுகட்ட பயணங்களை கடந்து சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. அதற்கான சுற்றுப்பாதையை விண்கலம் ஜனவரி 7-ம் தேதி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆதித்யா விண்கலத்தின் 2-வது ஆய்வுக் கருவி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஆதித்யா விண்கலத்தில் மொத்தம் 7 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில் ஹெல்1ஒஎஸ் எனும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி கடந்த அக்டோபரில் ஆய்வுப் பணிகளை தொடங்கியது. இது பதிவு செய்த சூரிய கதிர்வீச்சின் ஒளி அலை தரவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஏபெக்ஸ் (Aditya Solarwind Particle Experiment-ASPEX)எனும் 2-வது ஆய்வுக் கருவிசெப்டம்பர் முதல் செயல்பட்டுவருகிறது. இந்த கருவியானது, சூரிய புயல்கள், அதிலுள்ள ஆற்றல்அயனிகள் குறித்து ஆராய்ந்துவருகிறது. அது வழங்கிய தரவுகளின் அடிப்படையில் சூரியக் காற்றில் உள்ள புரோட்டான் மற்றும்ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், விண்கலம் தற்போது ஆரோக்கியமான நிலையில் இருக்கிறது. இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.