ஹாங்சோவ்: சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் கால்பந்தாட்டத்தில் இந்திய அணியை சீனா வீழ்த்தி உள்ளது. 5-1 என்ற கோல் கணக்கில் சீனா வெற்றி பெற்றுள்ளது.
குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் சீனா அணிகள் இன்று பலப்பரீட்சை மேற்கொண்டன. இரண்டு அணிகளுக்கும் இதுவே இந்த தொடரில் முதல் போட்டி. இதில் முதல் பாதி ஆட்டம் 1-1 என முடிந்தது. இரண்டாவது பாதியில் ஆர்ப்பரித்து எழுந்த சீனா அணி 51, 72, 75 மற்றும் 92-வது நிமிடங்களில் அடுத்தடுத்து நான்கு கோல்களை பதிவு செய்தது. அதன் மூலம் ஆட்ட நேர முடிவில் 5-1 என வெற்றியும் பெற்றது. இந்தத் தொடரின் குரூப் சுற்றில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணியை வரும் 21-ம் தேதி எதிர்கொள்கிறது. 24-ம் தேதி மியான்மர் அணியுடன் விளையடுகிறது.
இந்தத் தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு அணியை அறிவித்தது. பின்னர் கடந்த 13-ம் தேதி அதனை முற்றிலுமாக மாற்றி வேறொரு அணியை அறிவித்தது அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்). ஆனால், இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெறாத வீரர்கள் தற்போது தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஜோதிடரின் ஆலோசனைப்படி போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்தது போன்ற சர்ச்சை இந்திய கால்பந்து அணியை சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.