
பியோங்சாங்: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மானவ் தாக்குர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மானவ் தாக்குர், போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சீனாவின் மா லாங்குடன் மோதினார். இதில் மானவ் தாக்குர் 9-11, 10-12, 5-11 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்ற இந்திய வீரர்களான ஷரத் கமல் 8-11, 8-11, 7-11 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யுடா தனகாவிடமும், சத்தியன் 11-9, 9-11, 5-11, 11-9, 11-13 என்ற செட் கணக்கில் கொரியாவின் ஜெய்யூன் அனிடமும் தோல்வி அடைந்தனர்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி 9-11, 6-11, 4-11 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ஓரவன் பரணங்கிடமும், அய்ஹிகா முகர்ஜி 11-2, 11-6, 8-11, 9-11, 3-11 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜிங்டன் செனிடமும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர். மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, அய்ஹிகா முகர்ஜி ஜோடி 5-11, 11-13, 10-12 என்ற செட் கணக்கில் சீனாவின் மன்யு வாங், மெங் சென் ஜோடியிடம் வீழ்ந்தது.