கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் 2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முஹம்மது சிராஜ் அசத்தியுள்ளார். 6 ஓவர்களுக்குள்ளாகவே 6 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை.
இந்தியா – இலங்கை இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இலங்கையின் பிரேமதாசா மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவேண்டிய ஆட்டம் 3.40 மணிக்கு தொடங்கியது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா – பாதும் நிஸ்ஸங்காவின் பாட்னர்ஷிப்பை முதல் ஓவரிலேயே காலி செய்தார் பும்ரா. குசல் பெரேரா டக் அவுட்டானார். ஆடுத்து 4ஆவது ஓவரில் தான் அந்த மேஜிக் நடந்தது.
4ஆவது ஓவரை சிராஜ் வீச, நிஸ்ஸங்கா விக்கெட்டானார். அவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரமா,சரித் அசலங்கா,தனஞ்சய டி சில்வா அடுத்தடுத்து வெளியேறியது இலங்கை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அடுத்து சிராஜ் வீசிய 6ஆவது ஓவரில் தசுன் ஷனகா டக் அவுட்டானார். இதன் மூலம் 2 ஓவர்களை மட்டுமே வீசிய முஹம்மது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இலங்கையை பொறுத்தவரை 6 ஓவருக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 10 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இலங்கை 31 ரன்களைச் சேர்த்து ஆடி வருகிறது. குசல் மெண்டிஸ் 17 ரன்களுடனும், துனித் வெல்லலகே 6 ரன்களுடனும் ஆடி வருகிறார்.