கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பிற்பகல் 3 அணி அளவில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இந்தத் தொடரில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதுகின்றன. லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டிருந்தது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு இது 2-வது ஆட்டமாகும். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
காயம் காரணமாக லீக் சுற்றில் களமிறங்காத கே.எல்.ராகுல் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அதேபோன்று நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சொந்த காரணங்களுக்காக விலகி இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத்பும்ராவும் அணிக்கு திரும்பி உள்ளார். இவர்கள் இருவரும் களமிறங்கும் பட்சத்தில் இஷான் கிஷன், மொகமது ஷமி ஆகியோர் நீக்கப்படக்கூடும். இஷான் கிஷன் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் அரை சதம் அடித்துள்ளார்.
எனினும் கே.எல்.ராகுலின் உடற்தகுதி, அவரது பேட்டிங் பார்ம் ஆகியவற்றை உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி நிர்வாகம் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது உள்ளது. இந்த அடிப்படையில் கே.எல்.ராகுலுக்கு இன்றைய ஆட்டத்தில் விளையாடும் லெவனில் இடம் பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படக்கூடும். அவர், கடைசியாக கடந்த மார்ச் மாதம் சர்வதேச போட்டியில் விளையாடி இருந்தார். அதேவேளையில் ஜஸ்பிரீத் பும்ரா சுமார் ஒருவருடத்துக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் பந்து வீச உள்ளார்.
கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகிய இருவரும் விளையாடும் லெவனில் இடம் பெற்றால் ஷர்துல் தாக்குர் வெளியே அமரவைக்கப்படக்கூடும். லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நெருக்கடியான சூழ்நிலையில் இஷான் கிஷன் அற்புதமாக பேட் செய்து 82 ரன்கள் சேர்த்திருந்தார். இந்திய அணியில் மற்றபடி மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை.
லீக் சுற்றில் மழையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் மட்டை வீச்சில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறினர். இன்றைய ஆட்டத்தில் இவர்கள், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் தொடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும். அதேவேளையில் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஏற்கெனவே 2 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதை உறுதி செய்துகொள்ளும். இந்த தொடரில் 9 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள ஹரிஸ் ரவூஃப், தலா 7 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள ஷாகீன் ஷா அப்ரீடி, நசீம் ஷா ஆகியோரை உள்ளடக்கிய வேகப்பந்து வீச்சு கூட்டணி மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கிற்கு சவால் அளிக்க முயற்சி செய்யக்கூடும்.
தீவிர பயிற்சியில் கே.எல்.ராகுல்: பேட்டிங் வரிசையில் கே.எல்.ராகுல் 5-வது இடத்தில் களமிறங்கி இதுவரை 18 ஆட்டங்களில் 53 சராசரியுடன் 742 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம், 7 அரை சதங்கள் அடங்கும். விக்கெட் கீப்பிங் செய்யும் திறனையும் அவர், பெற்றுள்ளது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. நேற்றைய பயிற்சியில் கே.எல்.ராகுல் நீண்ட நேரம் விக்கெட் கீப்பிங் செய்தார். இது, அவர் களமிறங்க இருப்பதை உறுதி செய்வதாகவே தெரிந்தது.
வேகப்பந்து கூட்டணி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷாகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவூஃப் ஆகியோர் இதுவரை கூட்டாக 23 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர்.