மதுரை: இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரை பற்றி விரிவாக பேச வேண்டும், கலந்துரையாடல் செய்ய வேண்டும் என மதுரையில் தொல்.திருமாவளவன் எம்பி பேசினார்.
மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த ‘இந்தியாவின் சமூக நீதி’ பெருவிழா நேற்று நடந்தது. கோவை சட்டக்கல்லூரி மாணவி சினேகா, மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவர் இளையவளவன் தலைமை வகித்தார். முகமது யூசுப், டார்வின், சோமு அபுல்கசன், விஜய், உஜ்ஜய், நவின், ஜெயராமன், ராகுல்ராஜ், விக்னேஷ் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தொல். திருமாவளவன் எம்பி பேசியதாவது: சமூக நீதியை பெருக்க வேண்டும் என மாணவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுக்குரியது. மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு முற்போக்கு சிந்தனை வளர்கிறது. பாசிசத்திற்கு எதிராக போராடும் வகையில் நீங்கள் செயல்படுவது பாராட்டுகிறேன். இது நம்பிக்கையை தருகிறது. மதம், சாதி போன்ற எந்த அடையாளத்திற்குள்ளும் சிக்காமல் தனித்து முற்போக்காக சிந்திக்கும் அடையாளம் தான் இந்த சமூக நீதி பெருவிழா.
இதன்மூலம் மாணவர்கள் அரசியல் தெளிவு, சமூக பொறுப்பை பெற்றுள்ளனர். சமூக வலைத்தளங்களில் சாதி, மத பெருமை பேசு வோர் கொட்டம் அடிக்கிறார்கள் என்ற இக்காலத் திலும் கூட, பிற்போக்கு வலதுசாரிகளை வீழ்த்திவிட முடியும் என உணர்த்தி இருப்பதாக உணர்கிறேன். அரசியல் அமைப்பின் முகப்புரை என்ன சொல்கிறது என விரிவாக பேச கடமைப்பட்டிருக்கிறோம்.
இதுபற்றி விரிவான கலந்துயைாடல் செய்யவேண்டும். இதற்கு எதிரானது சனாதனம். உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையே யுத்தம் நடக்கிறது. பாசிசத்தை புரிந்து கொண்டால் தான் சனாதனம் குறித்து தெரிந்துகொள்ள முடியும். சர்வதேச சொல் பாசிசம். ஜனநாயகத்திற்கு எதிரானது பாசிசம். யாருக்கும் கருத்து, உணவு, உடை சுதந்திரம் இல்லை என்ற கோட்பாடு பாசிசம்.
நமது குடும்பத்திலும் பொருத்தி பார்க்கும் சொல் அது. நான் சொல்பவனை மட்டும் ஏற்க வேண்டும் என சில குடும்பத்திலும் பாசிசம் உள்ளது. யாரும் கருத்து சொல்லலாம் என்பது ஜனநாயகம். பாசிசத்தை சனாதனம் என மற்றொரு சொல்லால் அழைக்கின்றனர். சனாதன தர்மம் என்பது பிராமணர், ஆரியர்கள் சொல்லும் பெயர். நமது வாழ்வியல் எப்போது தோன்றியது என யாராலும் சொல்ல முடியாது.
வேதத்திற்கும், பூர்வீக குடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மனுஸ்ருதி ஆரியர்களை நெறிப்படுத்த தொகுக்கப்பட்ட நூல். மனுச்சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பிறப்பு அடிப்படையில் உயர்வு, தாழ்வை நிலைப்படுத்துவது தான் சனாதன தர்மம். பிராமண சாதிக்குள் சமத்துவம் இல்லை. இச்சமூகத்திற்குள் கடுமையாக பாதிக்கப்படுவோர் பெண்களாக இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.