புதுடெல்லி: அரசியலமைப்பின் மதிப்புகள், நாடாளுமன்ற மரபுகளையும் காக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். மேலும், தேசத்தைக் கட்டியெழுப்பவும், அரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு போகும் முன்பாக, பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய அரங்கில் பேசிய கார்கே, “அமைப்பின் (அரசு) வெற்றி என்பது அரசியலமைப்பு மதிப்பீடுகள் மற்றும் லட்சியங்களை நிலைநிறுத்துவதில் உள்ளது. அமைப்புகள் புனிதமானவை மற்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை என்ற கருத்து அரசு மற்றும் வளர்ச்சியின் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும்.
நாடு முன்னேறும்போது நாம் நமது அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் நாடாளுமன்ற மரபுகளை காக்க உறுதியளிக்க வேண்டும். கட்சி பாகுபாடுகளை மறந்து நாட்டை கட்டியெழுப்ப, நாட்டை அரசியலமைப்பை ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுவே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு முயற்சிகள் தேசமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்ல அடித்தளம் அமைத்துள்ளன” என்று தெரிவித்தார்.
கார்கே மேலும் தனது உரையில், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்திய அரசியலமைப்பினை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்புகளையும் நினைகூர்ந்தார்.
பிரதமருக்கு நன்றி கூறிய கார்கே: கார்கே தனது பேச்சில், “அந்த சென்ட்ரல் ஹால், பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் ‘ட்ரஸ்ட் வித் டெஸ்டினி’ உரைக்கு சாட்சியாக இருந்திருக்கிறது. பிரதமர் மோடி நேற்றைய தனது உரையில் இதனை நினைவுகூர்ந்தார். அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையை நினைவு கூர்ந்ததற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்” என்று தனது உரையின்போது பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக நாடாளுமன்றம் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நவீன இந்தியாவை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அரசியலமைப்பு இல்லம் என பெயரிடலாம் என்றும் பரிந்துரைத்தார்.