மேட்டூர்: மேட்டூர் அடுத்த மேச்சேரியில் மருத்துவ விடுப்பில் வீட்டிற்கு வந்த காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ் (22). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை சிறப்பு காவல் பிரிவில் 2-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் அன்புராஜ் திடீரென அரளி விதையை அரைத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அன்புராஜை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அன்புராஜ் வீட்டில் உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:- “அம்மா, போகிறேன் மா. நான் இத்தனை நாள் வாழ்ந்ததே உனக்காக தான். எனக்கு என்ன ஆச்சுனு தெரியல. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இத எப்படியும் யாராவது உங்கிட்ட படிச்சு காட்டுவாங்க. நான் யார் கிட்டையும் சொல்லாம போய்டலாம் என்று தான் நினைச்சேன். அப்புறம் எல்லாம் தப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க. என் மனமறிந்து யாருக்கும் கெட்டது செஞ்சதுல்ல.
என் தலைக்குள்ள ஏதோ ஓடிட்டு இருக்கு. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. வெளியே எங்கேயும் போகமாட்டேன் மா. கூடவே தான் இருப்பேன். அதுக்காகத்தான் வீட்டுக்கு வந்தேன். ‘ஒருவன் நல்லவன் என்பதற்கு அர்த்தம் அவன் இறந்த பின் அவனுக்காக சிந்தும் கண்ணீர் துளிகளால் மட்டுமே கண்டறியப்படுகிறது”. இவ்வாறு அவர் உருக்கமாக எழுதியிருந்தார். இதனால் அவர் குடும்ப பிரச்சனை, பணிச்சுமை அல்லது மனஉளைச்சல் ஏதாவது இருந்ததா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.