
மதுரை: ஒரு நாள் ஆடி அம்மன் ஆன்மிக சுற்றுலாவில் வரும் 17ம் தேதி முதல் மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியமமன் தெப்பக்குளம் திருக்கோயல், மடப்புரம் காளியம்மன் திருக்கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் திருக்கோயில், வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், அழகர் கோயில் ராக்காயி அம்மன் கோயில்களை சுற்றிப் பார்க்க தமிழ்நாடு சுற்றுலாத்துறை முன்பதிவை தொடங்கியது.
தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களுக்கு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து சுற்றுலா தொழில்களையும், அதன் வர்த்தகத்தையும் மேம்படுத்த சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மிக சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு நாள் ஆடி அம்மன் சுற்றுலா திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தில் நடப்பாண்டு சென்னை, மதுரை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்திப் பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை ஆன்மிக பயணிகள் தரிசனம் செய்யும் வகையில் ஒரு ஆடி அம்மன் சுற்றுலா திட்டம் வரும் 17ம் தேதி முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் கூறியதாவது: “இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆடி மாதத்தில் ஒவ்வொரு செய்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அழைத்து சென்று சிறப்பு தரிசனம் செய்வதற்கு இந்த ஒரு நாள் சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இந்த திட்டத்தில் மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் திருக்கோயில், மடப்புரம் காளியம்மன் திருக்கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் திருக்கோயில், வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், அழகர் கோயில் ராக்காயி அம்மன் கோயில் ஆகியவை இந்த ஒரு நாள் அம்மன் சுற்றுலா திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கோயில்களிலும் இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையும் இணைந்து பயணிகளை வரவேற்று தாமதம் செய்யாமல் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைவருக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அனைத்து கோவில்களிலும் அம்மன் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டும் ஆடி மாதத்தை முன்னிட்டு ஒரு நாள் ஆடி அம்மன் ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்கள் www.ttdconline.com என்ற இணையத்தின் மூலமாகவும் ஓட்டல் தமிழ்நாடு அழகர் கோவில் ரோடு, மதுரை என்ற முகவரியிலும் பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு 63806 99288, 91769 95841 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் அனைவரும் ஆடி அம்மன் சுற்றுலாவில் கலந்து கொண்டு இந்த சுற்றுலாவை ஊக்குவிக்க ஆதரவு தர வேண்டும்’’ என்றார்.