அருப்புக்கோட்டை: தினமும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுகின்றன என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பூர்வீக ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தங்களது பூர்வீக இடத்தையும் விஜயகாந்த் வாழ்ந்த வீட்டையும் நேற்று பார்வையிட்டார். அங்கு உள்ள பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், “கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ரூ.ஆயிரம் வழங்குவது என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி. இது காலதாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பது திமுக சொந்த பணமல்ல, மக்கள் வரிப்பணம். தற்போது பால் விலை, நெய் விலை, மின் கட்டணம், வீட்டு வரி என அனைத்தும் உயர்ந்து விட்டது.
ஒரு பக்கம் கொடுப்பது போல் மறுபக்கம் வசூல் செய்கிறார்கள். டாஸ்மாக் மூலம் வசூல் செய்கிறார்கள். குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பது போல மக்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்குகிறார்கள். இவ்வளவு நாட்கள் கொடுக்காமல் நாடாளுமன்ற தேர்தலுக்காகவே ஓட்டுக்கு காசு கொடுப்பதற்கு பதிலாக ஆறு மாதத்திற்கு முன் இதை ஆரம்பித்துள்ளார்கள்” என்றார்.
தொடர்ந்து உயர் நீதிமன்றம் அமைச்சர்களின் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்கவுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,” உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். காரணம் இல்லாமல் யார் மீதும் வழக்கு பதிய மாட்டார்கள். நீதிபதிக்கு தேமுதிக தலைவணங்குகிறது. இதுபோன்று கடுமையான நடவடிக்கை எடுத்தால் அமைச்சர்களுக்கு ஊழல் செய்வதற்கு பயமாக இருக்கும். ஒரு நேர்மையான ஆட்சி அமைவதற்கு அது வழி வகுக்கும். இந்த முயற்சி தொடர வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உரியவர்கள் தான்.” என்றார்.
உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சனாதனம் என்ற பெயரை வைத்து பிரித்தாலும் சூழ்ச்சியை அவர் கையாளுகிறார். சாதி எங்கும் ஒழியவில்லை. மதம், மொழி உணர்வு இதைப் பற்றி பேசும்போது கவனமாக பேச வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கலாச்சாரம் உள்ளது. அதை மதிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து விளையாட்டுத்தனமாய் பேசிக் கொண்டிருக்கிறார். இது தேவையில்லாத ஒன்று” என்றார்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, “அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 3வது கட்சி தேமுதிக. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் போது கட்சி நிலைப்பாடு குறித்து கண்டிப்பாக தெரிவிப்போம். விஜயபிரபாகர் தேர்தலில் போட்டியிடுவாரா, கட்சியில் பதவி வழங்கப்படுமா என விஜயகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து “கனிமவள கொள்ளை என்பது என் மனதை மிகவும் பாதித்த விஷயம். தினமும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுகின்றன. அந்தத் துறைக்கான அமைச்சர் துரைமுருகன் அவரிடம் கேட்டால் எனக்கு எதுவும் தெரியாது என்பார். அமலாக்கத்துறை முதலில் அவர் வீட்டில் தான் ரெய்டு நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஊழல் செய்வதில் முதலாவதாக உள்ள அமைச்சர் துரைமுருகன் தான்.
கனிமவள கொள்ளையால் தமிழகத்தில் எங்கும் தண்ணீர் இல்லை. இது மாற வேண்டுமென்றால் கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும். இரும்பு கரம் கொண்டு அது ஒடுக்கப்பட வேண்டும். கேரளாவில் இருந்து ஒரு லாரி மண் இங்கு கொண்டு வர முடியுமா? தமிழகத்தில் மட்டும்தான் மது போதையால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது. இதைப் பற்றி பேசாமல் இருப்பதற்கு தான் இந்த ஆயிரம் ரூபாய். இது போதாது, இன்னும் நிறைய செய்ய வேண்டும்” என்று பேசினார் பிரேமலதா.