Sports

அன்று கண்ணீர், இன்று ஆனந்தக் கண்ணீர்… – யாஷ் தயாள் வாழ்க்கையை புரட்டிப் போட்ட 2 ஓவர்கள்! | rcb பந்துவீச்சாளர் யாஷ் தயாள் வாழ்க்கையை மாற்றிய இரண்டு ஓவர்கள்

அன்று கண்ணீர், இன்று ஆனந்தக் கண்ணீர்… – யாஷ் தயாள் வாழ்க்கையை புரட்டிப் போட்ட 2 ஓவர்கள்!  |  rcb பந்துவீச்சாளர் யாஷ் தயாள் வாழ்க்கையை மாற்றிய இரண்டு ஓவர்கள்


இந்தியாவுக்கு ரிங்கு சிங் என்ற புதிய பினிஷரைக் கொடுத்த அந்த ஓரு ஓவர் நினைவிருக்கிறதா? ஏப்ரல் 9, 2023, ஐபிஎல் சீசனின் 13-வது போட்டி, அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் கொல்கத்தாவுக்கும் இடையே நடைபெற்றது.

குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்து 204 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர் (83 ரன்கள்), நிதிஷ் ராணா (45 ரன்கள்), ரிங்கு சிங் (48 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் கொல்கத்தா வெற்றி பெற்றது. அதுவும் கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றி பெற 28 ரன்கள் தேவை. கிரீசில் ரிங்கு சிங்கும் உமேஷ் யாதவும் இருந்தனர்.

கடைசி ஓவரை வீசியவர் யாஷ் தயாள் முதல் பந்தில் உமேஷ் யாதவ் சிங்கிள் எடுக்க ரிங்கு சிங் பேட்டிங் முனைக்கு வந்தார். அதன் பிறகு நடந்தது வரலாறு. யாஷ் தயாள் மூன்று புல்டாஸ்களை வீச மூன்றும் ரிங்கு சிங்கினால் சிக்ஸர்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டது. அடுத்து ஒரு பந்தை தன் காலின் கீழேயே குத்தி யாஷ் தயாள் தேங்காய் உடைக்க ரிங்கு சிங் லாங் ஆனுக்கு மேல் சிக்சரை விளாச 4 சிக்ஸர்கள் ஆனது.

கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை மீண்டும் ஷார்ட் பிட்ச் பந்து, ரிங்கு சிங் அதன்மீது மட்டையுடன் பாய்ந்து லாங் ஆன் மேல் சிக்ஸரைத் தூக்க கொல்கத்தாவுக்கு அசாத்திய வெற்றி சாத்தியமானது.

அன்று 28 ரன்களை தடுக்க முடியாமல் 5 சிக்சர்களைக் கொடுத்து விட்டோமே என்று மனமுடைந்து கண்ணீருடன் பெவிலியனில் காணப்பட்டார் யாஷ் தயாள். ஆனால், 2024 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மே 18-ம் தேதி நடைபெற்ற போட்டியில் காட்சிகள் மாறின.

இளையராஜா இசையில் 'ஓ ஜனனி என் ஸ்வரம் நீ' பாடலில், 'மாறும் எந்நாளும் காட்சிகள் மாறும் அப்போது வரும் பாதைகள்' என்ற வரிகள் வரும். இந்த வரிகள் இப்போது யாஷ் தயாளுக்குப் பொருந்தும்.

இந்த முறை பழைய, அனுபவசாலி பினிஷர் தோனி நிற்கிறார். பிலே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே முன்னேற தேவைப்படுவதோ ஒரு ஓவரில் 16 ரன்கள். தோனிக்கு இது ஒன்றும் பெரிய விஷயமல்ல, வீசுவதோ யாஷ் தயாள். ரிங்கு சிங் அடித்தது கண் முன்னால் வந்து போகுமில்லையா. ஆர்சிபியின் பிளே ஆஃப் வாய்ப்பு, ஒருவிதத்தில் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பும் யாஷ் தயாள் வீசும் கடைசி ஓவரில்தான் இருந்தது. இங்கும் மீண்டும் ஃபுல்டாஸ், தோனி அதை மிகப்பெரிய சிக்ஸருக்குத் தூக்கினார்.

ஆனால், யாஷ் தயாள் என்ன செய்தார்? கடந்த வருடம் போல் தொடர் புல்டாஸ்களை வீசக் கூடாது என்பதில் உறுதியானார். ஓடி வந்து ஸ்லோ பந்து ஒன்றை வீச தோனிக்கு டாப் எட்ஜ் ஆனது. அதை கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினர் ஆர்சிபி அணியினர். ஷர்துல் தாக்குர், ஜடேஜா 10 ரன்களை 4 பந்துகளில் அடிக்க முடியாதா என்ன? ஆனால், இந்த முறை யாஷ் தயாள் வீசிய அந்த 4 பந்துகள் ஸ்லோ பந்துகளாக 3 டாட்பால்கள் ஒரு பந்தில் ஒரு ரன் என அட்டகாசமாக ஓவரை முடிக்க ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய சிஎஸ்கே வெளியேறியது.

யாஷ் தயால் கூறுகிறார், “முதல் பந்து சிக்ஸருக்கு பறந்தவுடனேயே என் ஆழ்மனம் கடந்த வருடத்தின் அந்த ஓவரை மனதில் அசைபோட்டது. மனதில் பல விஷயங்கள் நிழலாடின. நல்ல பந்தை வீசியே தீர வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டேன். ஸ்கோர் போர்டையும் பார்க்கவில்லை, ரிசல்ட்டையும் பார்க்கவில்லை 4 பந்துகள் நல்ல பந்துகள் அவ்வளவுதான் என் மனதில் இருந்தது. சரிவர வீச முடியும் என்ற நம்பிக்கை இருந்தது” என்றார்.

இதில் இன்னொரு திருப்புமுனை, அதாவது ரிஸ்கியான திருப்புமுனை யாஷ் தயாள் 19-வது ஓவரை வீசியிருக்க வேண்டியது, ஆனால் தினேஷ் கார்த்திக், டூப்ளசி கலந்துரையாடி அவரை கடைசி ஓவரை வீச வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

அந்த ரிங்கு சிங் என்ற ஒரு புதிய பினிஷரை இவரது ஓவர் மூலம் நமக்குக் கொடுத்த யாஷ் தயாள் இந்தப் போட்டியில் தோனியை பினிஷ் செய்ய விடாமல் தூக்கியது நம் நினைவில் நீக்கமற நிறைந்து விட்டார். யாஷ் தயாளின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட இந்த 2 நபர்களை அவர் நிச்சயம் மறக்க மாட்டார்.

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *