சென்னை: “நான் முதன்முதலில் இந்தியில் ஒரு படம் நடிக்கலாம் என சூழல் அமைந்தபோது 2016-ம் ஆண்டு அனுராக் காஷ்யப் தயாரிப்பில் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது” என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் 50-ஆவது படம் ‘மஹாராஜா’. படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நிதிலன் இயக்குகிறார். இந்தப் படத்தின் முதல் தோற்றம் நேற்று வெளியானது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த உயரத்துக்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த என் இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்த படம் உங்களுக்கு பிடித்தது போல வந்திருக்கிறது. ஐம்பதாவது படம் என்பது நிச்சயம் என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல். அது ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது.
நடிகர் நட்டியைப் பார்க்கும்பொழுது ரஜினியின் அதே வேகம் ஈர்ப்பு அவரிடம் இருந்தது. இயக்குநர் நிதிலன் தயாரிப்பாளர்களின் பணத்தை எடுத்து தருவேன் என்று சொன்னது திமிர் கிடையாது. அவர் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை. அந்த அளவுக்கு சிறப்பாக படம் வந்திருக்கிறது.
அனுராக் காஷ்யப் நல்ல மனிதர். அவரை ஒருநாள் போனில் தொடர்புகொண்டு இந்தப்படத்தில் நடிக்க கேட்டன். ‘உனக்கு பிடிசிருக்கா. பண்ணலாம்’ என்றார். நான் முதன் முதலில் இந்தியில் ஒரு படம் நடிக்கலாம் என்ற சூழல் அமைந்தபோது 2016-ம் ஆண்டு அனுராக் காஷ்யப் தயாரிப்பில் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. நடிகராகவும் அவர் ஒரு சிறந்த நடிகர். நானும் அவரும் இணைந்து இன்னும் நிறைய படங்கள் பணிபுரிய வேண்டும் என விருப்பம்” என்றார்.