
மலையாளத்தில் வெளியான ‘கண்ணூர் ஸ்குவாட்’ பட இயக்குநரின் தந்தை, மம்மூட்டியை வைத்து படம் தயாரித்து நஷ்டமடைந்து சினிமாவில் இருந்து விலகினார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன்கள் அதே மம்மூட்டியை வைத்து மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ள ‘சக்சஸ்’ கதையைப் பார்ப்போம்.
கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி மம்மூட்டி நடிப்பில் வெளியான மலையாள படம் ‘கண்ணூர் ஸ்குவாட்’. இந்தப் படத்தை ராபி வர்கீஸ் ராஜ் இயக்க, அவரது சகோதரர் ரோனி டேவிட் ராஜ் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதி நடித்தும் உள்ளார். மலையாள சினிமாவில் இந்தாண்டின் ரூ.100 கோடி வசூலை குவித்த படம் என்ற பெருமையை பெற்றுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ரூ.100 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி என்பது ராபி மற்றும் ரோனி சகோதரர்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. பல ஆண்டுகள் தவம் அது.
‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்த்து முடித்ததும் இயக்குநரும் தனது சகோதரனுமான ராபியின் தோளில் சாய்ந்து ரோனி அழுதிருக்கிறார். தனது தந்தையின் தோல்வியை வெற்றியாக மீட்டெடுத்த ஆனந்த கண்ணீர் அது. ஒரு காலத்தில் இவர்களின் வாழ்க்கையை நெருக்கடிக்கு தள்ளிய இதே சினிமாதான் இன்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.
தயாரிப்பாளராக தோற்ற தந்தை: ராபி, ரோனி சகோதரர்களுக்கு நடிகர் மம்மூட்டியின் அறிமுகம் கிடைப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் தந்தை சி.டி.ராஜன். இவர், கடந்த 1989-ம் ஆண்டு வெளியான ‘மஹாயானம்’ (Mahayanam) என்ற படத்தை ‘ஹனி புரொடக்ஷன்ஸ்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இந்தப்படத்தில் மம்மூட்டி, சீமா, முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற போதிலும், பாக்ஸ் ஆஃபீஸில் லாபத்தை வசூலிக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர் சி.டி.ராஜன் கடனில் மூழ்கி, பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.
அத்துடன், சொந்த வீட்டையே விற்று, தான் வசித்த ஊரிலிருந்து வெளியேறி, பாலக்காட்டில் வாடகை வீடு ஒன்றில் குடியேறினார். நல்வாய்ப்பாக அவரது மனைவி அரசு ஊழியராக இருந்ததால் அன்றாட வாழ்க்கையை நடத்துவதில் சிக்கல் இல்லாமல் இருந்தது. தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் இனி படமே தயாரிக்க கூடாது என முடிவெடுத்து திரையுலகிலிருந்து விலகினார் சி.டிராஜன்.
வென்ற மகன்கள்: இனி சினிமாவே வேண்டாம் என முடிவெடுத்தவர், தனது மகன்களும் சினிமா பக்கமே சென்றுவிட க்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் தனது மூத்த மகன் ரோனியை மருத்துவம் படிக்க வைத்தார். இளைய மகன் ராபியை இன்ஜீனியரிங் படிக்க வைத்து அவர்களின் பாதைகளை மாற்றலாம் என தீர்மானித்திருந்தார். ஆனால், காலம் எப்போதும் போல் வேடிக்கையானது. மருத்துவத்தில் இருந்து வெளியேறிய ரோனி நடிப்பில் கவனம் செலுத்தினார். அதேபோல பொறியியல் முடிந்ததும் ராபி, சோஹோவில் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் அதிலிருந்து வெளியேறி ராஜீவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் அகாடமியில் சினிமோட்டோகிராஃபியை கற்றார். கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ‘மங்கள் பாண்டே’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
இது தொடர்பாக அவரது சகோதரரும் கண்ணூர் ஸ்குவாட் படத்தின் எழுத்தாளருமான ரோனி கூறுகையில், “நான் மும்பை சென்றிருந்தபோது, அவன் (ராபி) சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அவதிப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தேன். அவனை அங்கிருந்து அழைத்து வந்து ‘சார்லி’ படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளர்கள் குழுவில் சேர்த்துவிட்டேன். அதன் பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு மம்மூட்டி – நயன்தாரா நடிப்பில் வெளியான ‘புதிய நியமம்’ படத்தின் மூலம் ராபி ஒளிப்பதிவளாராக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் பணியாற்றி இறுதியில் தற்போது ‘கண்ணூர் ஸ்குவாட்’ மூலம் இயக்குநராகியுள்ளார்” என தனது சகோதரர் குறித்து பெருமையுடன் கூறியுள்ளார்.
மேலும் பேசுகையில், “மம்மூட்டியை வைத்து எனது தந்தை நஷ்டமடைந்த அதே சினிமா உலகில் 34 வருடங்களுக்குப் பிறகு, மம்மூட்டியே தயாரித்து நடித்துள்ள ‘கண்ணூர் ஸ்குவாட்’ ரு.100 கோடியைத்தாண்டி வசூலித்திருப்பது மரண மாஸான அனுபவம். ஆஸ்கார் வென்றதைப்போல உணர்கிறோம். காரணம் அப்பா நஷ்டத்தை சந்திக்கும்போது ராபிக்கு 4 வயது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானோம். நீங்கள் சினிமாவுக்குள் செல்லக்கூடாது என அப்பா உறுதியாக தெரிவித்திருந்தார். நான் படிக்கும் காலத்திலிருந்தே நாடகங்களில் நடிக்க தொடங்கினேன். சில தமிழ் நாடகங்களிலும் நடித்துள்ளேன். தம்பியும் பொறியியல் படித்து, விஸ்காம் படித்து, சினிமோடோகிராஃபி படித்து இப்போது இயக்குநராகியுள்ளார். படத்தை பார்த்து அப்பா மிகவும் எமோஷனலாகி கண்கலங்கிவிட்டார்” என்றார் உருக்கமாக.
4 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்குப் பிறகு ராபி – ரோனி சகோதரர்கள் ‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்தை இயக்கியுள்ளனர். முதல்நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு இயக்குநர் ராபி தனது தந்தையிடம், “அப்பா நாங்கள் ஜெயித்துவிட்டோம். நீங்கள் கனவு கண்ட சினிமாவை மீண்டும் உங்களிடமே கொண்டு வந்து சேர்த்துவிட்டோம்” என்று கூறியிருக்கிறார். நடிகர் மம்மூட்டி தெரிந்தோ, தெரியாமலோ தான் நடித்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்தின் வெற்றியின் மூலம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிச் செலுத்தியுள்ளார். ‘கண்ணூர் ஸ்குவாட்’ வரும் நவம்பர் 17-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.