துபாய்: எதிர்க்கட்சிகள் அணியை நீங்கள் வழிநடத்துவீர்களா என்ற இலங்கை அதிபரின் கேள்விக்கு, “அது மக்களின் கைகளில் உள்ளது” என்று மம்தா பார்னஜி பதில் அளித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கொல்கத்தாவில் இருந்து நேற்று புறப்பட்ட அவர், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு தங்கினார். அப்போது, அங்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அவரைச் சந்தித்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி, “இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, துபாய் சர்வதேச விமான நிலைய ஓய்வறையில் என்னைச் சந்தித்தார். கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு என்னை அழைத்தார். பணிவுடன் அதனை ஏற்றுக்கொண்டேன். அப்போது, கொல்கத்தாவில் நடைபெற உள்ள சர்வதேச தொழில் உச்சிமாநாடு 2023-ல் பங்கேற்க அவரை அழைத்தேன். இலங்கைக்கு வருகை தருமாறு அவர் எனக்கு அன்பான அழைப்பு விடுத்தார். ஆழமான தாக்கங்கள் கொண்ட ஒரு இனிமையான சந்திப்பு இது” என தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, “உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா? எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்க உள்ளீர்களா?” என்று ரணில் விக்ரமசிங்கே கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு, “அது மக்களின் கைகளில் உள்ளது” என மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.