புதுடெல்லி: மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் ‘ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ பற்றிய பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதி இந்தியாவுடன் ஒருங்கிணைந்த ஒன்று என்றும் வலியுறுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கே தேர்தல் ஆயத்தப் பணிகளைப் பார்வையிடச் சென்ற வி.கே.சிங்கிடம் ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “கொஞ்சம் காத்திருங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்” என்றார்.
வி.கே.சிங்கின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில், “அந்தப் பகுதி இந்தியாவின் ஒரு பகுதி. அது நமது தாய்நாட்டுடன் இணைந்த பகுதி. அதில் எந்த வேறுபாடும் இல்லை. என்னைப் பொறுத்தவரை அது இந்தியாவின் ஒரு பகுதி. அவர் பேசியது அவதூறானது. இந்தியாவுடன் ஒருங்கிணைந்திருக்கும் அந்தப் பகுதி இந்தியாவுடன் இருந்தது, இந்தியாவுடனே இருக்கும். இது இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று வேறுபடுத்திப் பார்க்க அவருக்கு எவ்வளவு தைரியம்?” என்று தெரிவித்துள்ளார்.
வி.கே.சிங்கின் கருத்து திசை திருப்பும் முயற்சி என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியின் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், “சிங் சாஹேப் (வி.கே.சிங்) நமது கவனத்தை சீனாவிடமிருந்து திசை திருப்ப முயற்சிக்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. அறிக்கை ஒன்றின்படி, இந்திய ராணுவம் ரோந்து சுற்றி வந்த 66 நிலைகளில் தற்போது 26 நிலைகளில் அவர்களால் செல்ல முடியவில்லை. ஜெனரல் சிங் முதலில் அது பற்றி பேச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
வி.கே.சிங்கின் பேச்சுக்கு பதில் அளித்துள்ள ஐக்கிய ஜனத தளம் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.தியாகி, “தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் இதைத் தெரிவித்து இருக்கிறார். அவரது கணிப்பு உண்மையானால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்” என்று கூறியுள்ளார்.