State

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; இதுவே எங்கள் நிலைப்பாடு: ஜெயக்குமார் அறிவிப்பு | No alliance with BJP: AIADMK former minister Jayakumar announcement

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; இதுவே எங்கள் நிலைப்பாடு: ஜெயக்குமார் அறிவிப்பு | No alliance with BJP: AIADMK former minister Jayakumar announcement
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; இதுவே எங்கள் நிலைப்பாடு: ஜெயக்குமார் அறிவிப்பு | No alliance with BJP: AIADMK former minister Jayakumar announcement


சென்னை: “பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்களது தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற எந்த ஒரு செயலையும், கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டன் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டான். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால், அது திமிர் பிடித்து ஆடும். வீட்டில் உள்ள பண்டபாத்திரங்களை எல்லாம் கொத்தும். சிட்டுக்குருவிகளுக்கே உள்ள புத்தி அது. அதுபோல், தகுதிக்கு மீறிய பதவி, அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து எதற்காக விருப்ப ஓய்வு பெற்றார் என்று எனக்கு தெரியாது. அங்கு சென்று கிளறினால்தான், இவரைப் பற்றி தெரியும்.

ஒரு அரசியல் தலைவருக்கே லாயக்கில்லாத, பாஜக தலைவருக்கே லாயக்கில்லாத, சிறுமைபுத்திக் கொண்ட, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அண்ணாமலை பேசி வருகிறார். அதிமுக என்பது ஒரு சிங்கக் கூட்டம். அந்த சிங்கg கூட்டத்தைப் பார்த்து, சிறு நரி அண்ணாமலை ஊளையிடுகிறது. ஊளையிடும் இந்த சிறு நரி தனியாக சென்று நிக்கட்டும். நோட்டாவுக்கு கீழே அண்ணாமலை வாக்குவாங்குவாரே தவிர, நோட்டாவைத் தாண்டமாட்டார். அப்படியிருக்கிறது அவருடைய செல்வாக்கு. பெரியார் குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிமுக பொதுச் செயலாளர்,ஜெயலலிதா, எம்ஜிஆர், குறித்துப் பேச என்ன தகுதி இருக்கிறது?

எனவே, தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக, எங்கு பார்த்தாலும், அண்ணாமலை வாழ்க என்று சொல்ல வேண்டும் என்பதற்காக ஒரு தோழமைக் கட்சி, கூட்டணிக் கட்சியை விமர்சனம் செய்து முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், அதை ஒருகாலும் அதிமுக தொண்டன் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

அண்ணாமலைக்கு பலமுறை எச்சரிக்கை கொடுத்தோம். அதிமுகவினர் திரண்டு எழுந்தால் நீங்கள் தாங்கமாட்டீர்கள். இனிமேல் அதிமுகவினர் அண்ணாமலையை விடமாட்டார்கள். அண்ணாமலையை ஐடி விங்கில், தாறுமாறாக விமர்சனம் செய்வார்கள். நீங்கள் ஒரு கருத்து சொன்னால், அண்ணாமலை விமர்சனத்துக்கு எதிராக ஓராயிரம் எதிர்கருத்து சொல்லப்படும்.

அண்ணாமலை குறித்து மேலிடத்திலும் புகார் செய்துவிட்டோம். என்டிஏ கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, இவரை திருத்த வேண்டும், இதுபோல அவரை பேச வேண்டாம் என்று கூறிவிட்டோம். கூட்டணியில் இருக்கும்போது அண்ணாமலை இவ்வாறு பேசினால், தேர்தல் நேரத்தில் எப்படி வேலை செய்வார்கள்? பாஜக தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை.

அவர் விரும்பாத சூழலில், இதுபோன்ற கருத்தைக் கூறி, எங்களுடைய தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டு அண்ணாமலை வைக்கும் விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அப்படி என்ன எங்களுக்கு அவசியம் இருக்கிறது? உங்களை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது? உங்களை யாராவது சுமக்கத்தான் வேண்டும். உங்களுக்கே காலே கிடையாது.

அண்ணாமலைக்கு காலே கிடையாது. பாஜக இங்கு கால் ஊன்றவே முடியாது. எந்தளவுக்கு உங்களுக்கு வாக்கு வங்கி இருக்கிறது என்பது தெரியும். அதிமுகவை வைத்துதான் உங்களுக்கு அடையாளமே. ஒரு தன்மானமுள்ள தொண்டன் அண்ணாமலையின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில், மேலிடத்திலும் அவர் குறித்து புகார் அளித்தாகிவிட்டது. திரும்பத்திரும்ப இதுபோல பேசினால், இனியும் பொறுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை.

எனவே, பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்களது தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா குறித்து விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அண்ணாமலையின் நடைபயணம் என்பது வசூல் பயணம் எனவும், அதிமுக துணையில்லாமல் பாஜக வெற்றிபெற முடியாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்தது குறித்து கேட்டபோது அவர், “சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு முன்பும், பின்பும் ஒருமாதிரி பேசுவார். அவர் அமைச்சராக இருந்தபோது என்னென்ன செய்தார் என்பது எனக்கு தெரியும். நேர்மையை பற்றி சி.வி.சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக்கூடாது. என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன்.

அவர்களெல்லாம் அமைச்சர்களாக இருந்ததே வசூலுக்காகத்தான். அவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாது. தூற்றுபவர்கள் தூற்றட்டும். பாஜக வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு பேசுகிறார்கள். இன்னும் அவர் பகுதிக்கு பாஜக நடைபயணம் போகவில்லை. போகும் போது பாருங்கள்.

கூட்டணியில் இருந்தால் கொள்கை மாறுபாடுகள் இருக்கும். அதற்காக அடிமையாக இருக்க முடியாது. பாஜக தனித்தன்மையுடன் 2026-ல் ஆட்சிக்கு வரும். இன்னொரு கட்சியின் பி டீம், சி டீம் ஆகவோ வராது. மற்றவர்களை ஏவி பதில் சொல்பவன் நான் அல்ல. பதிலை நானே சொல்வேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *