Business

மத்திய பட்ஜெட்டில் சலுகை ஆடை, தோல் ஏற்றுமதியில் இனி இந்தியா தான் நம்பர் 1!

மத்திய பட்ஜெட்டில் சலுகை ஆடை, தோல் ஏற்றுமதியில் இனி இந்தியா தான் நம்பர் 1!


ஆடைகள் மற்றும் காலணிகளுக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி வரியில் பல விலக்குகள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், இத்துறைகளில், உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சர்வதேச சந்தைப் போட்டியில் இந்தியாவின் நிலை வேகமாக முன்னேறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த வாரம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான ஏற்றுமதியில் மாநில மற்றும் மத்திய வரிகளின் தள்ளுபடியை, ஜவுளித்துறை அமைச்சகம் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மத்திய பட்ஜெட்டில், ஆடைகள் மற்றும் காலணிகளுக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் ஆடை ஏற்றுமதியில் முதலிடத்தில் சீனா உள்ளது. இரண்டாவது இடத்தில் வங்க தேசமும், மூன்றாவது இடத்தில் வியட்நாமும், நான்காவது இடத்தில் துருக்கியும் உள்ளது.
இந்த வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இதில், இந்தியாவின் ஏற்றுமதி பருத்தி ஆடைகளில் மட்டுமே 16 பில்லியன் அமெரிக்க டாலராகும். அதே நேரம், பங்களாதேஷின் ஏற்றுமதி 40 பில்லியன் அமெரிக்க டாலராகவும், சீனாவின் ஏற்றுமதி 120 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உள்ளது.

சீனா மற்றும் வங்க தேசத்தை விடவும், இந்தியாவின் உற்பத்தி திறன் குறைவாக இருப்பதால் ஏற்றுமதியில் தேக்க நிலை ஏற்படுகிறது.

மிகப் பெரிய அளவில் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டி தரும் துறையாக இந்த ஜவுளித் துறை இருந்து வருகிறது. ஆனாலும் இந்தியாவால், ஓரளவுக்கு மேல் ஆடைகளை ஏற்றுமதி செய்யமுடிவதில்லை. அதற்கு மூலப்பொருட்களின் பற்றாக்குறையும், உற்பத்தி செலவும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ,ஸ்பான்டெக்ஸ் தான் ஆடைகள் உற்பத்தியில் மிகவும் அதிகமாகவும் பொதுவாகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஸ்பான்டெக்ஸ் நூல் தயாரிப்பில் மெத்திலீன் டிஃபெனைல் டை-ஐசோசயனேட் என்னும் மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன.

இந்நிலையில் , இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், மெத்திலீன் டிஃபெனைல் டை-ஐசோசயனேட் (MDI)க்கான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜவுளி மற்றும் தோல் ஆடைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் டவுன் ஃபில்லிங் பொருட்களுக்கான சுங்க வரி 30 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல், தோல்கள், ஈரமான நீல நிற குரோம் தோல் மற்றும் மேலோடு தோல் ஆகியவற்றின் மீதான வரி 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி செய்யப்படும் பொருளின் மொத்த செலவில் சராசரியாக 7 சதவீதம் செலவு இந்த மூலப்பொருட்களுக்கே ஆகிறது. அதனால் உற்பத்தி செலவும் கூடுகிறது.

இப்போது அரசின் இந்த வரி குறைப்பால் , உற்பத்தி செலவு 4 சதவீதம் குறையும் என்பதால், இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான ராகுல் மேத்தா கூறும் போது, உலக வாடிக்கையாளர்கள் சீனா மற்றும் வங்கதேசத்துக்கு மாற்றாக இப்போது இந்தியாவைத் தேடுகின்றனர். இந்த வரி குறைப்பு இந்தியாவின் ஆடை மற்றும் தோல் ஏற்றுமதியை அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

உலக வர்த்தகத்தைப் பொறுத்த வரை, ஆடை மற்றும் தோல் பொருட்கள் தொழிலில் 3.5 சதவீத பங்கை இந்தியா வைத்திருக்கிறது. புகழ் பெற்ற ஜாரா, எச்&எம், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், வால்மார்ட், கேப், நெக்ஸ்ட் மற்றும் ப்ரைமார்க் போன்ற உலகளாவிய பிராண்டுகள் தற்போது ஆடை மற்றும் காலணிகளை இந்தியாவிலிருந்தே வாங்குகின்றன.

சுங்க வரியை மத்திய அரசு குறைத்திருப்பது வணிகம் செய்வதை எளிதாக்கும் என்றும், சர்வதேச சந்தையில் இந்தியா பொருட்களுக்கு நல்ல பிராண்ட் அந்தஸ்து கிடைக்கும் என்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு 35,000 கோடி ரூபாயாக இருந்த இந்திய ஆடை ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரித்து , இந்த ஆண்டு 40,000 கோடி ரூபாயாக வளர்ந்திருக்கிறது. இது வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *