State

“பொறுத்திருந்து பாருங்கள்; விரைவில் சிறப்பான கூட்டணி அமையும்” – இபிஎஸ் உறுதி | EPS speech in Namakkal ADMK IT wing meeting

“பொறுத்திருந்து பாருங்கள்; விரைவில் சிறப்பான கூட்டணி அமையும்” – இபிஎஸ் உறுதி | EPS speech in Namakkal ADMK IT wing meeting


நாமக்கல்: “சாலையில் சென்றுகொண்டிருக்கும் ஒரு காரில் இருந்து ஒவ்வொரு டயராக கழன்று செல்வது போல ஒவ்வொருவராக இண்டியா கூட்டணியிருந்து பிரிந்து செல்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள். விரைவில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறியதாவது: “அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள், இந்த மக்கள் விரோத ஆட்சியில் மக்கள் படும் சிரமங்கள் ஆகியவற்றை சமூக வலைதளங்களின் மூலம் கொண்டுபோய் சேர்ப்பது நமது தலையாய கடமை. அந்த காலத்தில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் எங்களுக்கு கிடையாது. சமூக வலைதளங்கள் இப்போது மிக முக்கியமாகிவிட்டது. நம்மை பொறுத்தவரை மக்களை நம்பிமட்டுமே நாம் கட்சி நடத்தி வருகிறோம். பணத்தை கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என்று சிலர் பகல் கனவு காண்கிறார்கள். அதிமுக மட்டுமே ஜனநாயக கட்சி.

திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி. கருணாநிதி திமுக தலைவராக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் அக்கட்சியின் தலைவராக இருக்கிறார். ஏதோ தில்லுமுல்லு செய்து கொள்ளைப் புறம் வழியாக ஆட்சிக்கு வந்து முதலமைச்சராக இருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய மகன் உதயநிதியை விளையாட்டுத் துறை அமைச்சராக்கி அவரை முன்னிலைப்படுத்தி வருகின்றார். அந்த கட்சிக்காக பல ஆண்டுகாலமாக உழைத்தவர்கள், பல ஆண்டுகளாக அமைச்சர்களாக இருந்தவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, ஸ்டாலின் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக உதயநிதியை முன்னிறுத்தி செயல்படும் கட்சி திமுக.

நம்முடைய கட்சி அப்படியானது அல்ல. மேடைக்கு கீழ அமர்ந்திருப்பவர்கள் மேடையில் வந்து அமரும் சூழல் உள்ள கட்சி அதிமுக. நானும் அங்கே அமர்ந்து, மேடைப் பேச்சைக் கேட்டு படிப்படியாக மேலே வந்து இங்கே அமர்ந்திருக்கிறேன். அதற்கு நானே சாட்சி. அதிமுகவில் மட்டுமே ஒரு கிளைச் செயலாளர், முதலமைச்சராக முடியும். ஒரு கிளைச் செயலாளர் பொதுச் செயலாளர் ஆக முடியும். கட்சிக்காக உழைக்கின்றவர்களின் வீட்டுக் கதவை தட்டி பதவியை கொடுக்கக் கூடிய கட்சி அதிமுக. அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. இன்று இங்கே நான் இருக்கிறேன். நாளை உங்களில் இருந்து ஒருவர் இந்த இடத்துக்கு வருவார்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. தேசிய கட்சிகளோடு கூட்டணி வைத்தால் நம் மாநிலத்தின் பிரச்சினைகளை அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை. அதனால் பாதிக்கப்படுவது நாம்தான். தமிழ்நாட்டு மக்களுடைய உரிமைகளை பாதுகாக்க, அவர்களுக்கு தேவையான நிதியை பெற்றுவர, புயல், வெள்ளத்தின் போது தமிழ்நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை யார் நிவர்த்தி செய்கிறாரோ அவர்களுக்கே நாம் ஆதரவு கொடுப்போம். இண்டியா கூட்டணி என்று ஒரு கூட்டணி அமைத்து திமுக ஆட்சியை பிடிக்க விரும்பியது. ஆனால் சாலையில் சென்றுகொண்டிருக்கும் ஒரு காரில் இருந்து ஒவ்வொரு டயராக கழன்று செல்வது போல ஒவ்வொருவராக இண்டியா கூட்டணியிருந்து பிரிந்து செல்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள். விரைவில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்” இவ்வாறு இபிஎஸ் பேசினார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *