State

புதுச்சேரியில் எந்தெந்த மாணவர்களுக்கு லேப்டாப்? – முதல்வர் ரங்கசாமி விளக்கம் | Rangaswamy talks laptops for +2 Students

புதுச்சேரியில் எந்தெந்த மாணவர்களுக்கு லேப்டாப்? – முதல்வர் ரங்கசாமி விளக்கம் | Rangaswamy talks laptops for +2 Students


புதுச்சேரி: கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு சென்ற மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியில் ரூ.45 லட்சம் செலவில் புதிதாகக்‌‌ கட்டப்பட்டுள்ள தாய் சேய் துணை நல்வாழ்வு மையக் கட்டிடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு புதிய தாய்சேய் துணை நல்வாழ்வு மையக் கட்டிடத்தைத் திறந்து வைத்து பேசியது: ”சுகாதாரத் துறைக்கு இந்தியாவிலேயே அதிக வசதிகளை செய்து கொடுக்கும் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது. மத்திய குழுவினர் புதுச்சேரி வந்து சுகாதார நிலையங்களை ஆய்வு செய்துவிட்டு என்னிடம் பேசினர். அப்போது இந்தியாவிலேயே புதுச்சேரிதான் நம்பர் ஒன் என்று கூறினர்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஊதியமும் உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் சுகாதார மையத்தில் தான் இருப்போம். வீடு தேடி செல்லமாட்டோம் என்று சொல்வார்கள். அப்படி சொல்லக்கூடாது. வீடுகள்தோறும் சென்றால் வீடு தேடி செல்லும் மருத்துவம் மக்களுக்கு எளிதாக கிடைக்கும். இதனால் அரசு பொது மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளை தேடி செல்ல வேண்டிய அவசியமும் மக்களுக்கு இருக்காது.

சுகாதார மையத்தில் என்னென்ன வசதிகள் வேண்டுமோ, மத்திய அரசு என்ன கணக்கீட்டில் கொடுத்துள்ளதோ அதைவிட அதிகமான வசதிகளை நாம் செய்து கொடுத்துள்ளோம். கட்டிட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரில் அரசு பொது மருத்துவமனை, கதிர்காமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இருப்பது போன்று கிராமப்புறத்தில் அரசு பொது மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தோம். அதன்படி விரைவில் கிராமப்புறத்தில் அரசு பொது மருத்துவமனை ஒன்று கொண்டுவரப்படும்.

புதுச்சேரியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் காலத்தோடு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். புதுச்சேரியில் நல்ல கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம்.

ரூ.68 கோடி மதிப்பில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் அறிவிக்கும்போது கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்த பிள்ளைகள் இப்போது கல்லூரிக்கு சென்றுவிட்டனர். அந்த பிள்ளைகள் எங்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என்று கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கும் நிச்சயமாக லேப்டாப் வழங்கப்படும்.

நியாயமானது எதுவாக இருந்தாலும் அதனை இந்த அரசு செவிமடுத்து கேட்டு செய்து கொடுக்கும். புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சுமார் 250 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது நன்றாக உள்ளனர். அதேபோன்று கிட்னி மாற்று அறுவை சிகிச்சை ஒரு நோயாளிக்கு செய்யப்பட்டு அவர் நலமுடன் இருக்கின்றார். இதுபோல் புதிய தொழில்நுட்பங்களுடன் சிறப்பு மருத்துவ வசதியை கொடுக்க வேண்டும் என்பதில் அரசு அக்கறை எடுத்துக்கொண்டு செய்து வருகிறது” என்றார்.

விழாவில் சட்டப்பேரவைத் தலைவர்‌ செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர்‌ ஸ்ரீராமுலு, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், சுகாதாரத் துறை துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) டாக்டர் முரளி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *