Cinema

“படப்பிடிப்பில் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால்…” – பெப்சி எச்சரிக்கை | Fefsi president rk selvamani said to ensure safety in shooting spots

“படப்பிடிப்பில் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால்…” – பெப்சி எச்சரிக்கை | Fefsi president rk selvamani said to ensure safety in shooting spots


சென்னை: “எங்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் நாங்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டோம்” என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) அறிவித்துள்ளது.

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலைஉயிரிழந்தார். இதையடுத்து படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் வியாழக்கிழமை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை முன்னிட்டு சென்னையில் இன்று ஒருநாள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதில் பல்வேறு 7 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. அவை:

  • படப்பிடிப்பில் பணிபுரியும் அனைத்து கலைஞர்களுக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கும், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு ஏற்படுத்தி தர வேண்டும்.
  • படப்பிடிப்பு நடக்கும் இடங்களில், படப்பிடிப்பு நிலையங்களில் தீவிபத்து ஏற்பட்டால் இருக்க தேவையான பாதுகாப்பும், தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்கள் இருக்க வேண்டும்.
  • படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி அளிக்க கூடிய வசதிகளும், மருத்துமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
  • பெண் திரைப்பட கலைஞர்களுக்கும், திரைப்பட தொழிலாளர்களுக்கும் கழிப்பறை வசதிகளும், உடை மாற்ற தேவையான வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும்.
  • லைட்மேன் மற்றும் அனைத்து டெக்னீசியன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் படப்பிடிப்பில் பணிபுரியும் போது ஹெல்மெட், ரிப்லேக்டிவ் ஜாக்கெட், கிளவுஸ் மற்றும் காலனி (Show) அணிந்தே பணிபுரிய வேண்டும். அவ்வாறு அணியாமல் பணிபுரியும் உறுப்பினர்கள் மீது சம்மேளனம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். படப்பிடிப்பு நிலையங்களில் திரைப்பட தொழிலாளர்கள் கோடா போன்ற உயரமான இடங்களில் பணிபுரியும் போது மேற்கொண்ட கருவிகளுடன் Hermes (belt) அணிந்தே பணிபுரிய வேண்டும்
  • படப்பிடிப்பு நிலையங்களில் உள்ள கோடக்களில் வெகு காலத்திற்கு முன்பு அமைக்கப்பட்டதாலேயே அல்லது குறைந்த பட்ச பாதுகாப்பு வசதிகள் இல்லாமலேயே உள்ளன இனி சம்மேளன உறுப்பினர்கள் பாதுகாப்பு கருவிகளும், பாதுகாப்பு வசதிகள் உள்ள இடங்களில் மட்டுமே பணிபுரிவார்கள்.
  • திரைப்பட தொழிலாளர்கள் பணிபுரியும் போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தாலோ அல்லது மருத்துவ வசதிகள் தேவைப்பட்டாலோ தகுந்த இழப்பீடும், மருத்துவ வசதிகளையும் மத்திய மாநில அரசுகள் திரைப்பட தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். வருகின்ற ஆகஸ்டு 15 முதல் இந்த வசதிகள் உள்ள திரைப்படநிலையங்களில் மட்டுமே, திரைப்பட அவுட்டோர் யூனிடில் மட்டுமே சம்மேளன தொழிலாளர்கள் பணிபுரிவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, “தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ‘இந்தியன் 2’ தொடங்கி ‘சர்தார் 2’ வரை 25 பேர் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு அகால மரணமடைந்துள்ளனர். தகுந்த பாதுகாப்பு இல்லாமல், சில நேரங்களில் அலட்சியம், கவனக்குறைவின்மை, போதிய வசதிகள் இல்லாததால் இந்த விபத்துகள் ஏற்படுகின்றன. பலமுறை நாங்கள் இது குறித்து பேசி வருகிறோம். இம்முறை முதன் முறையாக சம்பந்தப்பட்ட அனைத்து சங்க உறுப்பினர்களையும், அழைத்து பேசியுள்ளோம். பாதுகாப்பு என்பது நம் உயிர் தொடர்புடைய விஷயம். அலட்சியம், கவனக்குறைவு இருக்க கூடாது என்பது குறித்து விரிவாக இன்றைய கூட்டத்தில் பேசினோம்.

இதில் தயாரிப்பாளர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என்பது தான் தயாரிப்பாளர்களின் கடமை. அதன்பிறகு நடக்கும் சிக்கலுக்கு ஏதோ ஒரு உறுப்பினர் தான் காரணமாக இருக்கிறார். கடைசியாக நிகழ்ந்த விபத்தில் கூட, படப்பிடிப்பு தளத்தில் கயிறு உறுதியாக இல்லாமல் அறுந்து விழுந்துள்ளது. இதனை உறுதி செய்வது தயாரிப்பாளரின் வேலையில்லை. சம்பந்தப்பட்ட உதவியாளரோ, ஸ்டூடியோ பொறுப்பாளரோ தான் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் எங்களின் உறுப்பினர்களுக்கு 60-70 சதவீதம் பொறுப்பு உண்டு. எங்கள் உறுப்பினர்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதால் அவர்கள் அனைவரையும் அழைத்து பேசியுள்ளோம்.

எங்களுக்குத் தெரிந்த மற்றொரு பிரச்சினை என்னவென்றால், சீக்கிரம் செட் அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இன்றுக்கு ஜூலை 25-ம் தேதி என வைத்துக்கொண்டால், திடீரென்று ஒரு ஹீரோ அழைத்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு வைத்து கொள்ளலாம் என்கிறார். 3, 6 மாதம் முன்பு சொல்லவேண்டும். ஒரு செட் போட வேண்டுமென்றால், 45 முதல் 50 நாட்கள் தேவைப்படும். காரணம் இன்றைக்கு எல்லாமே பிரமாண்ட செட்டாக மாறிவிட்டது.

ஹீரோவின் கட்டாயத்தால் படத்தின் இயக்குநர் கலை இயக்குநருக்கு அழுத்தம் கொடுக்கிறார். கலை இயக்குநர் உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். அதனாலேயே உறுப்பினர்கள் எல்லா நாளும் 24 மணி நேரமும் வேலை பார்க்க வேண்டிய சூழல். 50 நாட்கள் செய்ய வேண்டிய வேலையை 10, 15 நாட்களில் செய்வது கடினம். தயாரிப்பாளரையோ, நாயகனை நான் இங்கு குறை சொல்லவில்லை. ஆனால், கடைசி நேரத்தில் செட் போடுவதை தவிர்க்க வேண்டும். இன்று பல படப்பிடிப்பு தளங்களில் அவசரமாக செட் போடுவதால் பெயின்ட் கூட காயாமல் இருக்கிறது.

இதன் மூலம் நாயகர்களுக்கு நாங்கள் வைக்கும் வேண்டுகோள், என்னவென்றால், முன்கூட்டியே படப்பிடிப்பின் தேதியை நிர்ணயித்துவிடவும். மேலும் இங்கே வசதி இல்லை என்று சொல்லி ஹைதராபாத் சென்றுவிடாதீர்கள். ஏற்கெனவே 50 சதவீதம் வேலை இல்லாமல் ஆகிவிட்டது. படப்பிடிப்பு நடப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்து தர வேண்டும்.

எங்கள் உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடும், விபத்து காப்பீடும் தயாரிப்பாளர் ஏற்படுத்தி தர வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் ஆம்புலன்ஸை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவை எங்களின் குறைந்தபட்ச கோரிக்கை. பாதுகாப்பு பெல்ட் கொடுக்க வேண்டும். க்ளவுஸ், ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் இதனை அமல்படுத்த வேண்டும். இதனை ஏற்பாடு செய்து கொடுக்காவிட்டால் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் நாங்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டோம். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களின் 1 சதவீத ஊதியத்தை கொடுங்கள் என கூறினோம். அது குறித்து யாரும் கண்டுகொள்ளாதது வருத்தமளிக்கிறது” என்றார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *