Tour

பசுமை ரயில் திட்டத்துக்கு மாறும் நீலகிரி மலை ரயில்: ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்த முடிவு | Nilgiris Hill Railway to switch to Hydrogen fuel

பசுமை ரயில் திட்டத்துக்கு மாறும் நீலகிரி மலை ரயில்: ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்த முடிவு | Nilgiris Hill Railway to switch to Hydrogen fuel


குன்னூர்: நீலகிரி மலை ரயிலை ஹைட்ரஜன் எரிபொருளுக்கு மாற்றி இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதால், பாரம்பரிய நீராவி இன்ஜினுக்கு இணையாக முன்மாதிரி இன்ஜினை வடிவமைக்க வேண்டுமென, மலை ரயில் ஆர்வலர்கள் விரும்புகின்றனர். மேட்டுப்பாளையம் –குன்னூர் இடையே‘மீட்டர்கேஜ்’ பாதையில், ‘எக்ஸ் கிளாஸ்’ இன்ஜின்களால்15 கி.மீ. வேகத்துக்கு குறைவாக இயக்கப்படும் மலை ரயிலில் பயணிப்போர், இயற்கை காட்சிகளை ரசித்து செல்கின்றனர்.

தற்போது, மலை ரயிலை இயக்க டீசல் இன்ஜின்கள், பர்னஸ் ஆயில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையில், பசுமை ரயில் திட்டத்தின் கீழ் நீலகிரி மலை ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூய்மையான சுற்றுச்சூழல்: இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய ரயில்வே அதன் ஹைட்ரஜன் மிஷன் திட்டத்தின் கீழ், நீலகிரி மலை ரயில் உட்பட நாட்டிலுள்ள எட்டு பாரம்பரிய வழித்தடங்களில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. தற்போது, ஹரியாணாவில் பல்வேறு பாரம்பரிய ரயில் தடங்களுக்கு ஏற்ற வகையில், ஹைட்ரஜனில் இயங்கும் இன்ஜின்களுக்கான முன்மாதிரியை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஹைட்ரஜன் ரயில்கள் கார்பன், நைட்ரஜன் மற்றும் பிற துகள்கள் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் மாசுக்களை வெளியிடுவதில்லை என்பதால், ஜெர்மனி மற்றும் சீனாவில் சமீப காலமாக ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மலை ரயிலுக்கு ஹைட்ரஜனால் இயங்கும் இன்ஜின் முன்மாதிரியை உருவாக்க ரூ.80 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “உலகம் முழுவதும் தற்போதுள்ள டீசலில் இயங்கும் ரயில் இன்ஜின்களை ஹைட்ரஜனால் இயங்கும் இன்ஜின்களாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இன்ஜின்கள், கார்பன் உமிழ்வு இல்லாத மாற்றாக இருப்பதால், பாதையின் மின்மயமாக்கலுக்கு மாற்றாகவும் அமையும்.

இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில்களில் முதலில் எட்டு பெட்டிகள் இருக்கும். உயிர்க்கோள காப்பகத்தின் முக்கிய மையமாக விளங்கும் நீலகிரியில், உலக பாரம்பரிய சின்னமான மலை ரயில் மூலமாக ஹைட்ரஜன் மிஷன் தொழில்நுட்பம், தூய்மையான சுற்றுச்சூழல் நடைமுறைகளுக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைட்ரஜன் இன்ஜின்கள், டீசலுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை எரிபொருளாக பயன்படுத்துகின்றன. ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை இணைப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இது, இழுவை மோட்டார்களுக்கு நிலையான சக்தி மூலத்தை வழங்க, பேட்டரிகளுக்கு சக்தியை அளிக்கிறது.

இந்திய ரயில்வே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வடக்கு ரயில்வேயில் ஜின்ட்-சோனிபட் வழித்தடத்தில் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதி சோதனையும் நடைபெறவுள்ளது. நீலகிரி மலை ரயில், தென்னிந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ரயில் பாதை” என்றனர்.

மலை ரயில் ஆர்வலர்கள் கூறும்போது, “நீலகிரி மலை ரயிலுக்கு ஹைட்ரஜன் மிஷன் முயற்சி வரவேற்கத்தக்கது. இந்திய ரயில்வே அதன் நூற்றாண்டு பழமையான பாரம்பரியத்தை தொடரும் வகையிலும்,ரயிலின் அசல் பயன்முறையை பாதுகாக்கும் வகையிலும், மலை ரயிலில் ஹைட்ரஜன் இன்ஜினுக்கான முன்மாதிரியை வடிவமைக்க வேண்டும்” என்றனர்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *