State

சூமோட்டோ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளை ஐகோர்ட் தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் | CJ of the HC has to decide the judges who will hear Sumoto cases: Supreme Court

சூமோட்டோ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளை ஐகோர்ட் தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் | CJ of the HC has to decide the judges who will hear Sumoto cases: Supreme Court


புதுடெல்லி: ‘தாமாக முன்வந்து பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளை தலைமை நீதிபதிதான் தீர்மானிக்க வேண்டும்’ என்று அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர். இந்தக் காலக்கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், அவரது மனைவி உட்பட மூவர் மீது ரூ.44.56 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். இதனை எதிர்த்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், ‘இந்த வழக்கு உயர் நீதிமன்ற விதிகளுக்கு எதிராக, தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல்லாமல் தனி நீதிபதி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளார். எனவே, தனி நீதிபதியின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபப்ட்டது. அதில், தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறவில்லை. ஆனால், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள வழக்கின் கோப்புகளை தலைமை நீதிபதி பார்த்துள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அமைச்சர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், “உயர் நீதிமன்ற பதிவாளரின் அறிக்கையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறவில்லை என கூறப்பட்டுள்ளதால், தனி நீதிபதியின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டனர். அப்போது பதிவாளர் தரப்பில், “விசாரணைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விதிகளை தவறாக புரிந்துகொண்டு இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது. ஏற்கெனவே, இதே போன்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது” என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். இந்த வழக்குகளை தலைமை நீதிபதியே விசாரிக்கலாம் அல்லது வேறு அமர்வுகளுக்கு மாற்றி உத்தரவிடலாம்.

அதேநேரம் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளை தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கின் உத்தரவு, அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை எந்த அமர்வில் விசாரித்தாலும், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *