State

கூவம், அடையாறு சீரமைப்பின் நிலை என்ன?- வெள்ளை அறிக்கை கோரினார் அன்புமணி ராமதாஸ் | PMK founder Ramdoss seeks report on status of Cooum river restoration process

கூவம், அடையாறு சீரமைப்பின் நிலை என்ன?- வெள்ளை அறிக்கை கோரினார் அன்புமணி ராமதாஸ் | PMK founder Ramdoss seeks report on status of Cooum river restoration process


சென்னை: சென்னை நதிகள் சீரமைப்புத் திட்டத்தில் இதுவரை என்னென்ன பணிகள் நடைபெற்றுள்ளன என்பது பற்றி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் ஓடும் கூவம் மற்றும் அடையாற்றை சீரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அத்திட்டத்திற்காக இதுவரை ரூ.790 கோடி செலவழிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 54 விழுக்காட்டுக்கும் கூடுதலான நிதி செலவிடப்பட்டு விட்ட நிலையில், அதற்கு இணையான முன்னேற்றம் கண்களுக்கு தென்படவில்லை.

சென்னையின் விரும்பத்தகாத அடையாளங்களாக திகழும் அடையாறு, கூவம் ஆகிய ஆறுகளை சீரமைப்பதற்காக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதற்காக அந்த அறக்கட்டளைக்கு 2015&16ஆம் ஆண்டு முதல் ரூ.1479 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியில் இதுவரை ரூ.790 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின்படி, தூர் வாருதல், அகலப்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக மட்டும் ரூ.129.22 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்த இரு ஆறுகளின் கரைகளில் வாழ்ந்த மக்களை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் குடியமர்த்துவதற்காக ரூ.290.13 கோடி, ஆறுகளில் கழிவுநீரைக் கொட்டும் குழாய்களை அடைப்பதற்காக ரூ.129.83 கோடி, சுற்றுச்சுவர் மற்றும் வேலிகளை அமைப்பதற்காக ரூ.122.99 கோடி, மரம் வளர்ப்பு மற்றும் அழகுபடுத்துதல் பணிக்காக ரூ.20.75 கோடி செலவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பணிகள் நடைபெற்றிருந்தால் அடையாறு மற்றும் கூவம் ஆறு ஓரளவாவது அழகாகியிருக்க வேண்டும்.

ஆனால், அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. கூவம், அடையாற்றை அழகுபடுத்த சுமார் 800 கோடி செலவழிக்கப்பட்டிருந்தால், அவற்றை கண்களை அகலவிரித்து பார்க்கும் நிலை உருவாகி இருக்க வேண்டும்; மாறாக, இப்போதும் இந்த இரு ஆறுகளின் அருகில் சென்றாலே மூக்கை மூட வேண்டிய நிலை தான் உள்ளது. ஆறுகளை சீரமைக்கும் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடான ரூ.1479 கோடியில் இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை என்பது 54 விழுக்காடு ஆகும்.

ஒரு திட்டத்திற்கான ஒதுக்கீட்டில் 54% செலவழிக்கப்பட்டிருந்தால், அந்த அளவுக்கு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கூவம் மற்றும் அடையாற்றை சீரமைக்கும் பணிகளில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை; அதிகாரிகளிடமும் இதற்கு பதில் இல்லை.

அடையாற்றில் நந்தம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட சில இடங்களிலும், கூவம் ஆற்றில் அமைந்தகரை, எத்திராஜ் சாலை உள்ளிட்ட சில இடங்களிலும் சீரமைப்புப் பணிகள் ஓரளவு நடந்திருப்பது உண்மை. அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் மதிப்பு சில லட்சங்களில் வேண்டுமானால், இருக்கலாமே தவிர, அரசால் குறிப்பிடப்படும் அளவுக்கு இருக்காது. கூவம் ஆற்றை சீரமைக்கும் பணி 2015&ஆம் ஆண்டிலும், அடையாற்றை சீரமைக்கும் பணி 2017&ஆம் ஆண்டிலும் தொடங்கியது.

இந்த பணிகள் தொடங்குவதற்கு முன்பாக இந்த இரு ஆறுகளை பார்த்தவர்கள், இப்போது இந்த ஆறுகளை பார்த்தால் அதிக அளவாக 6 வேறுபாடுகளைக் கூட காண முடியாது. இந்த இரு ஆறுகளும் தொடங்கிய இடம் முதல் கடலில் கலக்கும் இடம் வரை பெரும்பான்மையான பகுதிகளில் சகிக்கவே முடியாத அளவுக்கு நாற்றம் வீசுகிறது. அப்படியானால், ஆறுகள் சீரமைப்புத் திட்டத்தின்படி என்னென்ன பணிகள் தான் மேற்கொள்ளப்பட்டன? என்ற வினா எழுகிறது. ஆனால், விடை தான் கிடைக்கவில்லை.

அடையாறும், கூவமும் ஒரு காலத்தில் சென்னையின் புனித ஆறுகளாகத் தான் இருந்தன. வள்ளல் பச்சையப்ப முதலியார் போன்றவர்கள் கூவம் ஆற்றில் குளித்து ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். கோயில்களின் வழிபாட்டுக்கு இந்த இரு ஆறுகளில் இருந்து தான் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் சென்னை மாநகர மக்களின் 60 ஆண்டு கால கனவாக இருந்து வருகிறது. அதற்காக பல தருணங்களில் ஆயிரக்கணக்கான கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டனவே தவிர, கூவம் மற்றும் அடையாற்றின் நாற்றம் மட்டும் குறையவில்லை. இந்த நிலை எப்போது மாறும்? எனத் தெரியவில்லை.

அடையாறு மற்றும் கூவத்தை சீரமைப்பது சாத்தியமில்லாத இலக்கு அல்ல. உலகின் பல நாடுகளில் இதை விட மோசமான ஆறுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அடையாறு தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரையிலான நீளம் 42 கி.மீ மட்டும் தான். அதேபோல், கூவம் ஆற்றின் நீளம் 65 கி.மீ தான். அரசியல் துணிச்சல் மற்றும் மன உறுதியுடன் பணிகள் தொடங்கப்பட்டால், 5 ஆண்டுகளில் கூவத்தையும், அடையாற்றையும் அழகு மிகுந்த சுற்றுலாத் தலங்களாக மாற்றி விட முடியும். ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கூவம், அடையாறு சீரமைப்பு என்பது தேர்தல் காலத்து பேசு பொருளாக இருக்கிறதே தவிர, அதை செயல்படுத்தும் துணிச்சல் எந்த அரசுக்கும் இதுவரை வரவில்லை.

அடையாறு மற்றும் கூவத்தை சீரமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகையை ஆற்றில் கொட்டியதாக நினைத்து கடந்து போய்விட முடியாது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. எனவே, சென்னை நதிகள் சீரமைப்புத் திட்டத்தில் இதுவரை என்னென்ன பணிகள் நடைபெற்றுள்ளன? அனைத்து பணிகளும் எப்போது முடியும்? கூவம் மற்றும் அடையாற்றின் கரைகளில் மக்கள் காற்று வாங்கியபடி பொழுதுபோக்குவது எப்போது? என்பன போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *