State

காவிரி விவகாரம் | மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் குழு செவ்வாய் காலை சந்திப்பு: அமைச்சர் துரைமுருகன் தகவல் | TN All Party MPs will meet the Union Minister on the Cauvery issue tomorrow morning: Minister Duraimurugan

காவிரி விவகாரம் | மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் குழு செவ்வாய் காலை சந்திப்பு: அமைச்சர் துரைமுருகன் தகவல் | TN All Party MPs will meet the Union Minister on the Cauvery issue tomorrow morning: Minister Duraimurugan


புதுடெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்திக்க உள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய குழு, இன்று மாலை மத்திய அமைச்சரை சந்தித்து கர்நாடக அரசு இதுவரைதமிழகத்துக்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தேவையான அறிவுரைகள் வழங்கக் கோரி நேரில் சந்திக்க இருந்தனர். மத்திய அமைச்சர் அவசரப் பணி காரணமாக, எம்.பி.,க்கள் குழுவை நாளை சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “காவிரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரை தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் நாளை (செப்.19) காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் சந்திக்க இருக்கிறோம்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவோ, காவிரி மேலாண்மை ஆணையமோ, காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி கண்ணை மூடிக் கொண்டு சொல்லமாட்டார்கள். கர்நாடகத்தில் எத்தனை அணைகள் உள்ளன. எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை எல்லாம் கணக்கிட்டு, எவ்வளவு தண்ணீர் விடமுடியும் என்று பாதகம் இல்லாமல் பார்த்துதான் அவர்கள் உத்தரவு பிறப்பிக்கின்றனர்.

அதில் கா்நாடகம் குறுக்குசால் விடுகிறது. இது கர்நாடகா எப்போதும் செய்யும் வேலைதான். இது ஒன்றும் புதிது கிடையாது. காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு 5000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பயிர்கள் காய்ந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வரும்வரை, அந்த பயிர்கள் உயிராவது வைத்துக் கொண்டிருக்கும், இந்த தண்ணீரை திறந்துவிட்டால்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. இவை பிறப்பிக்கும் உத்தரவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, மத்திய அரசு கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதைத்தான் மத்திய அமைச்சரிடம் நாங்கள் கேட்கப் போகிறோம்.

மழைப் பொழிவு குறைவு, போதுமான தண்ணீர் இல்லை என்பது கர்நாடக தரப்பு நிலைப்பாடு. அவர்களது நிலைப்பாட்டைக் கூறுவதை நான் தவறு என சொல்லவில்லை. எங்களுடைய பங்கீடு இருக்கிறது என்று எங்களது தரப்பு கருத்தை கூறுகிறோம். அதே மூன்றாவது தரப்பான காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு பார்த்துவிட்டது தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறுகின்றனர். அதையும் ஏற்க கர்நாடகம் மறுக்கிறது.

காவிரியில் தண்ணீர் தர மறுப்பது இன்றைக்கு நேற்றல்ல, எப்போதுமே கர்நாடகா ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். ஒருகாலத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. உச்ச நீதிமன்றம் வரை சென்றோம். அதன்பிறகு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. தீர்ப்பாயத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை கர்நாடகா எதிர்த்தது.

மறுபடியும் உச்ச நீதிமன்றம் சென்றோம். மீண்டும் உச்ச நீதிமன்ற அனுமதி பெற்று வந்தோம். அரசிதழில் வெளியிட மாட்டேன் என்றார்கள். அதற்கும் உச்ச நீதிமன்றம் சென்றோம். வெகுநாட்களாக காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். அதற்கும் உச்ச நீதிமன்றம் சென்றோம். இப்படி ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுத்தான் சென்று கொண்டிருக்கிறோம்” என்றார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *