State

காருக்கு ரூ.180, லாரிக்கு ரூ.660 – மதுரை நத்தம் 4 வழி சாலை டோல்கேட்டில் வசூல் வேட்டை! | madurai natham highway toll gate Extra charge

காருக்கு ரூ.180, லாரிக்கு ரூ.660 – மதுரை நத்தம் 4 வழி சாலை டோல்கேட்டில் வசூல் வேட்டை! | madurai natham highway toll gate Extra charge


மதுரை: மத்திய அரசின் பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மதுரை மாநகர் தல்லாக்குளத்தில் இருந்து, நத்தம், துவரங்குறிச்சி, திருச்சி வழியாக சென்னை செல்வதற்கும், நத்தம் வழியாக திண்டுக்கல் செல்வதற்கும் ரூ.1,744 கோடியில் மதுரை – நத்தம் நான்கு வழிச்சாலை புதிதாக போடப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி, மேலூர் வழியாக மதுரைக்கு வருகின்றன.

இதில், துவரங்குறிச்சியில் இருந்து மதுரை வருவதற்கான பயணம் தூரம் 71 கிலோ மீட்டர் ஆகும். இந்த பயண நேரத்தை குறைப்பதற்காக துவரங்குறிச்சியில் இருந்து நத்தம் (25.5 கி.மீ), நத்ததில் இருந்து மதுரை(35.5 கி.மீ) தற்போது நத்தம் நான்கு வழிச்சாலை போடப்பட்டுள்ளது. பயண தூரமும், விரைவான போக்குவரத்திற்கு மேம்பாலங்களும், விசாலமான பிரம்மாண்ட நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளதால் திண்டுக்கல், திருச்சி செல்லக்கூடியவர்கள் தற்போது இந்த சாலையில் சென்று வருகிறார்கள்.

இந்த சாலையில் இதுவரை டோல்கேட் கட்டணம் வசூல் செய்யாமல் வந்ததால், மதுரை மேலூர் வழியாக திருச்சி செல்பவர்களும், மதுரை ஆரப்பாளையம், கொடைரோடு வழியாக திண்டுக்கல் செல்பவர்களும் அந்த சாலைகளை தவிர்த்து, மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலையை பயன்படுத்தினர். அதனால், மதுரை-மேலூர் சாலை, மதுரை-திண்டுக்கல் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே, மதுரை மாவட்ட மக்களும், மதுரை வழியாக வந்து செல்லும் வெளியூர்க்காரர்களும், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ள ஏராளமான டோல்கேட்டுகளில் சட்டத்திற்கு புறம்பாக வசூல் செய்யும் டோல்கேட் கட்டணத்தால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட, விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் டோல்கேட் திமுக ஆட்சிக்கு வந்ததும் உறுதியாக அப்புறப்படுத்தப்படும் என அறிவித்து இருந்தார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் தற்போது வரை அந்த டோல்கேட் அகற்றப்படவில்லை.

இந்த சூழலில் மதுரை மக்களுக்கும், வாகன ஓட்டிகளும் மற்றொரு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மதுரை-நத்தம் சாலையில் டோல்கேட் கட்டணம் வசூல் தொடங்கியிருக்கிறது. இந்த டோல்கேட்டில் ஒரு முறை சென்று வர கார், டிராக்டருக்கு ரூ.180, மினி வேன், டெம்போ டிராவல்ஸ் வாகனத்திற்கு ரூ.290, பஸ், நான்கு சக்கரம் சிறிய கண்டெய்னருக்கு ரூ.605, ஆறு சக்கரம் கண்டெய்னருக்கு ரூ.660, 8 சக்கரம் கண்டெய்னர்களுக்கு ரூ.1155 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிகத்தில் இதுபோன்று அதிகம் கட்டணம் வசூல் செய்யும் டோல்கேட்டுகள் இல்லை. அந்தளவுக்கு இந்த புதிய டோல்கேட்டில் அதிக கட்டணம் நிர்ணயித்து வசூல் செய்வதால் முதல்முறையாக இந்த சாலையில் டோல்கேட் கட்டணம் செலுத்தி சென்ற கார் ஒட்டுநர்கள், லாரி ஒட்டுனர்களுக்கும், டோல்கேட் ஊழிர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆனாலும், டோல்கேட் கட்டணம் கட்டாமல் அவரகள் விடமறுத்ததால் அவர்கள் வேறு வழில்லாமல் கட்டணம் செலுத்தி சென்றனர். பலர் அவ்வளவு தொகை தங்களிடம் இல்லாமல் உறவினர்களையும், நண்பர்களையும் கூகுள் பேயில் பணம் போட சொல்லி கட்டணம் செலுத்தி சென்றது பரிதாபமாக இருந்தது.

இந்த டோல்கேட் நத்தத்திற்கு முன் 10 கி.மீ., தொலைவில் உள்ளதால் மதுரையில் இருந்து திருச்சி செல்லக்கூடியவர்கள் கட்ட வேண்டிய ரூ.180 கட்டணத்தை, திண்டுக்கல் செல்லக்கூடியவர்களும் கட்ட வேண்டிய உள்ளது. அதனால், இதுவரை இந்த சாலை வழியாக திண்டுக்கல் சென்றவர்கள் மீண்டும் கொடைரோடு வழியாக மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் செல்வார்கள்.

விஸ்வநாதன் – மினி லாரி டிரைவர்

அதுபோல், இந்த சாலை வழியாக திருச்சி சென்றவர்கள், இந்த டோல்கேட்டை விட ரூ.70 குறைவாக உள்ள மேலூர் வழியாக ரூ.110 டோல்கேட் கட்டணம் செலுத்தி அந்த வழியாக செல்லத்தொடங்குவார்கள். அதனால், மதுரை-நத்தம் சாலை இவ்வளவு பிரமாண்டமாக தேசிய நெடுஞசாலைத்துறை ஆணையம் போட்டும் மக்களும், வாகன ஓட்டிகளும் பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு ஏற்கனவே மதுரை கப்பலூரில் அப்புறப்படுத்துவதாக கூறிய டோல்கேட்டையும் அகற்ற நடவடிக்கை எடு்க்காமல் மவுனம் காக்கிறது. இந்நிலையில் தற்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை எதிர்ப்பே தெரிவிக்காமல் அனுமதித்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிருப்தியடைந்துள்ளனர். மக்களவைத்தேர்தல் நெருங்கும்நிலையில் மதுரை மக்களவைத்தொகுதியில் இந்த டோல்கேட் விவகாரமும் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

கையில் கட்டணம் கட்ட பணம் இல்லை: திருச்சி மினி லாரி டிரைவர் விஸ்வநாதன் கூறுகையில், “நான் 10 ஆண்டாக நான்கு வழிச்சாலைகளில் டோல்கேட்டுகளை கடந்து செல்கிறேன். இதுபோன்ற கூடுதல் கட்டணத்தைப்பார்க்கவில்லை. இந்த டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்வார்கள் என்று தெரியவில்லை. பாஸ்ட் ட்ராக்கிலும், என் வங்கி கண்க்கிலும் பணம் இல்லை. நண்பர்களிடம் பணம் பெற்று மீண்டும் ரிசார்ஜ் செய்து செல்கிறேன். போகிற போக்கை பார்த்தால் எந்த வேலையும் பார்க்க முடியாது. எந்த வாகனத்தையும் ரோட்டில் ஓட்டவே முடியாது” என்றார்.

கிருஷ்ணன்

மதுரை கிருஷ்ணன் கூறுகையில், “நான் தொழில் ரீதியாக அன்றாடம் மதுரையில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று வருகிறேன். நேற்று திருச்சி சென்றேன். டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்யவில்லை. இன்று முன் அறிவிப்பே இல்லாமல் ரூ.180 வசூல் செய்கிறார்கள். இந்த கட்டணம் அதிகமாக தெரிகிறது. இப்படி டோல்கேட் கட்டணம் வசூல் செய்தால் காரை எடுத்து செல்லவே பயமாக இருக்கிறது.

டோல்கேட்டுக்கே மாதந்தோறும் பெரிய தொகை செலுத்த வேண்டிய உள்ளது. முன்போல் தொழில் லாபகரமாக இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் மக்களை இழிச்சவாயர்களாக நினைக்கிறார்கள். இரண்டு நாள் புலம்புவார்கள். பிறகு அவர்களுக்கு பழக்கமாகிவிடும் என்று நினைக்கிறார்கள். வாகனத்தை எடுக்கும்போது சாலை வரி கட்டிதான் எடுக்கிறோம். அதன்பிறகு இன்சூரன்ஸ், டோல்கேட் கட்டணம், பராமரிப்பு செலவு சேர்த்தால் காரில் யாருமே செல்ல முடியாது. முன்பு சலுகை விலையில் மாதம் ரூ.300 அடிப்படையில் டோல்கேட் பாஸ் கொடுத்தார்கள். தற்போது அதையும் நிறுத்திவிட்டார்கள். வருமானரீதியில் டோல்கேட்கள் செயல்பட ஆரம்பித்துவிட்டது” என்றார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *