National

“உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு” – ராஜஸ்தான் முதல்வர் குற்றச்சாட்டு | Udaipur Tailor Killers Are Associated With BJP: Rajasthan Chief Minister Alleges

“உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு” – ராஜஸ்தான் முதல்வர் குற்றச்சாட்டு | Udaipur Tailor Killers Are Associated With BJP: Rajasthan Chief Minister Alleges


ஜெய்ப்பூர்: உதய்பூர் தையல்காரர் கொலையாளிகள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வரும் 25-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜக வகுப்புவாத கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக சாடியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் தையல் கடை நடத்தி வந்த கன்னையா லால் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு, இரண்டு பேரால் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கொலையாளிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். இந்தச் சம்பவம் ராஜஸ்தானிலும், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நபிகள் நாயகம் குறித்து தவறாகப் பேசிய குற்றச்சாட்டில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கன்னையா லால் பதிவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை குறித்த வழக்கு ஜூன் 29, 2022-ல் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இந்தநிலையில், ஜோத்பூரில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “அது ஒரு துரதிருஷ்டமான சம்பவம் (கன்னையா லால் கொலை). அந்த கொலை குறித்து கேள்வி பட்டதும் எனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு நான் உதய்பூர் சென்றேன். ஆனால் உதய்பூர் சம்பவம் குறித்து அறிந்த பிறகும் பாஜகவுன் முக்கிய தலைவர்கள் அந்த சமயத்தில் உதய்பூர் வருவதை விட ஹைதராபாத் கூட்டத்துக்கேச் சென்றனர். சம்பவம் நடந்த அடுத்த நாளே அந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (ஐஎன்ஏ) எடுத்துக்கொண்டது. நாம் அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. என்ஐஏ என்ன நடவடிக்கை எடுத்தது என்று யாருக்கும் தெரியாது. நமது காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு (Special Operations Group) வசம் வழக்கு இருந்திருந்தால் குற்றவாளிகள் இந்தநேரம் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.

அந்தக் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு உள்ளது. கன்னையா லால் கொலை சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அந்த குற்றவாளிகள் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களை விடுதலை செய்வதற்காக பாஜக தலைவர்கள் காவல் நிலையம் வந்தனர்.

தேர்தல் தோல்வியை உணர்ந்துவிட்ட பாஜக தேவையில்லாத கூற்றுக்களை பரப்பி வருகிறது. அவர்கள் நாங்கள் கொண்டுவந்த திட்டங்கள் இயற்றிய சட்டங்களைப் பற்றி ஒருவார்த்தை கூட பேசுவதில்லை. தேர்தலுக்கு முன்பாக பிரச்சினையை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்” இவ்வாறு கெலாட் பேசினார்.

முன்னதாக, கடந்த மாதம் சித்தோர்கர் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கன்னையா லால் கொலை வழக்கில் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். பிரதமர் கூறுகையில், “உதய்பூரில் நடந்தது கற்பனைக்கும் எட்டாத கொடூரமான சம்பவம். துணி தைக்க வேண்டும் என்று கடைக்குச் சென்ற சிலர் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இல்லாமல் தையல்காரரின் கழுத்தை அறுத்துள்ளனர். காங்கிரஸ் அரசு அந்த கொலை வழக்கை வாங்கு வங்கி அரசியல் கண்ணாடி போட்டே பார்க்கிறது. உதய்பூர் தையல்காரர் கொலை சம்பவத்துக்கு பின்னர் அதை வாக்குவங்கி அரசியலாக பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடக்க இருக்கிறது. மொத்த 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றது. பின்னர் பிஎஸ்பி மற்றும் சுயேட்சை எம்எல்ஏகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *