State

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல் |தென்னிந்தியாவுக்கான ஆபத்தை தடுக்க வேண்டும்: ராமதாஸ் | Another Chinese Spy Ship Arriving on Sri Lanka: Threat to South India must be Averted: Ramadoss

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல் |தென்னிந்தியாவுக்கான ஆபத்தை தடுக்க வேண்டும்: ராமதாஸ் | Another Chinese Spy Ship Arriving on Sri Lanka: Threat to South India must be Averted: Ramadoss


சென்னை: கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருக்கும் ஷி யான் உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சீனாவிலிருந்து புறப்பட்டுள்ள ஷி யான் 6 (Shi Yan 6) என்ற உளவுக் கப்பல் அடுத்த மாதம் இலங்கையில் உள்ள கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வரவிருப்பதாகவும், அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதாகவும் கிடைத்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

சீன உளவுக் கப்பலின் ஆராய்ச்சி என்பது தென் மாநிலங்களை உளவு பார்ப்பது தான் என்பதால், இது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீன உளவுக் கப்பல் ஷி யான் இரு நாட்களுக்கு முன் மலேஷியாவை அடுத்த மலாக்கா நீரிணைக்கு வந்து விட்டதாவும், அங்கிருந்து அக்டோபர் மாத இறுதியில் இலங்கையில் கொழும்பு, அம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களுக்கு வந்து சேரும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மலாக்கா நீரிணையில் ஆய்வு மேற்கொள்ளாமல் உடனடியாக புறப்பட்டால், செப்டம்பர் 24 அல்லது 25ம் நாள் அக்கப்பல் இலங்கைக்கு வந்து சேரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரு துறைமுகங்களிலும் மொத்தம் 17 நாட்கள் சீனக் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும்; அப்போது பல ஆராய்ச்சிகள் செய்யப்படும் என தெரியவந்திருக்கிறது.

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்குள் நுழைய சீன உளவுக்கப்பலுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் அது தொடர்பான கோரிக்கை இலங்கை அரசின் ஆய்வில் இருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே ஒரு மோசடி.

இந்திய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி தான் சீனக் கப்பலுக்கு அனுமதி அளிக்காதது போல இலங்கை அரசு காட்டிக் கொள்கிறது. ஆனால், கடைசி நேரத்தில் சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு கண்டிப்பாக அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்.

ஷி யான் உளவுக் கப்பல் மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். பல நூறு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக் கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் இந்தக் கப்பலுக்கு உண்டு.

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டாலும் அங்கிருந்து தமிழகத்தில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்களையும் எளிதில் உளவு பார்த்து, அது குறித்த தகவல்களையும் சேகரித்து விட முடியும். அணு சக்தி ஆராய்ச்சி நிலையங்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் எத்தகைய தொடர்பு கொண்டவை என்பதை அறிந்தவர்களால், சீன கப்பலின் இலங்கை வருகை எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஷி யான் கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து இல்லை என்று இந்த அச்சுறுத்தலை கடந்து செல்ல முடியாது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங் என்ற கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அம்பான்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அந்தக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டதையடுத்து, அக்கப்பல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. யுவான் வாங் 6 கப்பலால் இந்தியாவுக்கு எத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுமோ, அதை விட மோசமான அச்சுறுத்தல் ஷி யான் கப்பலாலும் ஏற்படும்.

அதுமட்டுமின்றி, யுவான் வாங் கப்பலை விட அதிகமாக 17 நாட்களுக்கு ஷி யான் கப்பல் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் என்பதால், தென்னிந்தியாவில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து முக்கிய நிலைகளையும் சீனா உளவு பார்த்து தகவல்களை செகரித்து வைத்துக் கொள்ள முடியும். அதை எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு எதிராக சீன அரசால் பயன்படுத்த முடியாது. இது இந்தியாவுக்கு மிகவும் ஆபத்து ஆகும்.

ஆசியாவை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் தனது எதிர்காலத் திட்டத்துக்கு இந்தியா தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதும் சீனா, இந்தியாவைச் சுற்றிலும் தனது பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தி, ராணுவ ரீதியாக முடக்குவதற்கு திட்டமிட்டு வருகிறது. அதற்காகவே ஒன்றன்பின் ஒன்றாக உளவுக்கப்பல்களை அனுப்பி இந்தியாவை உளவு பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த காலங்களில் கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி சீனாவின் சாங்ஷெங் -2 நீர் மூழ்கிக் கப்பலும், சாங் ஜிங் தாவ் போக்கப்பலும் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து 5 நாட்கள் இந்திய நிலைகளை உளவு பார்த்தன. கடந்த ஆண்டு யுவான் வாங் உளவுக் கப்பல் வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த இரு வாரங்களுக்கு முன் ஹாய் யாங் 24 என்ற போர்க்கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்துக்கு வந்து, இரு நாட்கள் இருந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சென்றுள்ளது.

அடுத்தக்கட்டமாக வரும் ஷி யான் கப்பலுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என இலங்கை தரப்பில் கூறப்பட்டாலும், அனுமதி அளிக்க இலங்கை அரசு முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. சீனக் கப்பலின் இலங்கை வருகை என்பது ஐக்கிய நாடுகள் கடல் சட்ட உடன்படிக்கையை மீறிய செயல் ஆகும்.

சீனக் கப்பலை இலங்கை அனுமதிப்பது 1987ம் ஆண்டு இந்திய, இலங்கை அமைதி உடன்பாட்டிற்கு எதிரான செயலாகும். அந்த உடன்பாட்டின்படி இலங்கை மண்ணை இந்திய ஒற்றுமை, ஒருமைப் பாட்டுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது. சீனக் கப்பலை அனுமதிப்பது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் அதை இலங்கை அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. சீனா தொடர்பான சிக்கல்களைப் பொறுத்தவரை இலங்கை அரசு இரட்டை வேடம் போடுகிறது என்பதையும் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மையில், டெல்லி வந்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்க, இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்தார். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக சீன உளவுக் கப்பல்களுக்கு இலங்கை தொடர்ந்து கம்பளம் விரித்து வருகிறது.

இதை புரிந்து கொண்டு, இலங்கை அரசுடனான நமது பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் திருத்தங்களை செய்ய வேண்டும். கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருக்கும் ஷி யான் உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அதை ஏற்க இலங்கை அரசு மறுத்தால் அந்நாட்டுக்கு மிகக் கடுமையான பாடத்தை மத்திய அரசு புகட்ட வேண்டும்.” என ராமதாஸ் கூறியுள்ளார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *