Sports

ஆசிய கோப்பை | நிலைக்காத முன்னணி வீரர்கள் – 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் வீழ்ந்தது இந்தியா | asia cup | Bangladesh won by 6 runs against india

ஆசிய கோப்பை | நிலைக்காத முன்னணி வீரர்கள் – 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் வீழ்ந்தது இந்தியா | asia cup | Bangladesh won by 6 runs against india


கொழும்பு: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி த்ரில் வெற்றிபெற்றுள்ளது.

266 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பந்தே ரோகித் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக திலக் வர்மா 5 ரன்கள், கேஎல் ராகுல் 19 ரன்கள், இஷான் கிஷன் 5 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 26 ரன்கள், ஜடேஜா 7 ரன்கள் என அடுத்தடுத்து இந்திய அணி வீரர்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒருபுறம் விக்கெட் சரிவு ஏற்பட்டாலும், மறுபுறம் ஓப்பனிங் வீரர் ஷுப்மன் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நிதானமாக கிடைக்கிற பந்துகளை எல்லைக்கோட்டுக்கு பறக்கவிட்டு ரன்கள் சேகரித்த அவர் சதம் கடந்து அசத்தினார். 121 ரன்களில் அவரும் ஆட்டமிழக்க இந்திய அணி இக்கட்டான நிலைக்கு சென்றது. இறுதிக்கட்டத்தில் அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் கூட்டணி அமைத்தனர். ஆனால், 49வது ஓவரில் இருவரும் விக்கெட்டை பறிகொடுக்க கடைசி ஓவரில் 12 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.முதல் 3 பந்துகள் டாட் பாலாக அமைய, 4வது பந்தில் பவுண்டரி அடித்தார் ஷமி. ஆனால் அடுத்த பந்தில் ஷமி ரன் அவுட் ஆக, 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்றது. இந்திய அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

வங்கதேச அணி இன்னிங்ஸ்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் – லிட்டன்தாஸ் இணையை 2-வது ஓவரிலேயே முஹம்மது சமி பிரித்தார். ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டினார் லிட்டன் தாஸ். 3ஆவது ஓவரில் தன்சித் ஹசனை 13 ரன்களில் ஷர்துல் தாக்கூர் வெளியேற்றினார். தொடர்ந்து அனாமுல் ஹக்கின் விக்கெட்டையும் பறிகொடுத்து 6 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 29 ரன்களில் தடுமாறியது வங்கதேச அணி.

மெஹிதி ஹசன் மிராஸ் – ஷகிப் அல் ஹசன் இணை சேர்ந்து இனியும் விக்கெட்டை விட்டுகொடுக்க கூடாது என சபதமேற்று ஆடினர். ஆனால், அவர்களின் சபதத்தை 13-ஓவரில் முறியடித்தார் அக்சர் படேல். மெஹிதி ஹசன் 13 ரன்களில் அவுட். மறுபுறம் நின்றிருந்த ஷகிப் அல் ஹசன் ஏற்ற சபதத்தில் உறுதியாக நின்று அடித்து ஆடி அணிக்கு பலம் சேர்த்தார். அவருக்கு தவ்ஹீத் ஹ்ரிதோய் உறுதுணையாக நிற்க இருவரும் இணைந்து விளையாடி அணிக்கு நம்பிக்கை சேர்த்தனர். 85 பந்துகளில் 80 ரன்களைச் சேர்த்த ஷகிப்பின் விக்கெட்டை ஷர்துல் தாக்கூர் எடுத்தது இந்திய அணிக்கு ஆசுவாசம் கொடுத்தது. 34வது ஓவர் முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 161 ரன்களைச் சேர்த்தது வங்க தேசம்.

ஷமிம் ஹொசைன் 1 ரன்களிலும், தவ்ஹீத் 54 ரன்களிலும், நசும் அகமது 44 ரன்களிலும் அவுட்டாக இறுதியில் போராடிய வங்க தேசம் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை சேர்த்தது. தன்சிம் ஹசன் சாகிப் 14 ரன்களிலும், மெஹிதி ஹசன் 29 ரன்களிலும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், முஹம்மது சமி 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், ஜடேஜா, பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *