National

‘‘அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள்’’: மனதின் குரல் உரையில் பிரதமர் பெருமிதம் |  Youth of country have benefited a lot  PM Modi praises space sector reforms in Mann ki Baat

‘‘அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள்’’: மனதின் குரல் உரையில் பிரதமர் பெருமிதம் |  Youth of country have benefited a lot  PM Modi praises space sector reforms in Mann ki Baat


புதுடெல்லி: ‘‘அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு அதிக வர ஆர்வம் காட்டுகிறார்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அதன்படி, 113-வது வார மனதின் குரல் நிகழ்வில் இன்று பேசிய பிரதமர் மோடி, “இந்த 21ம் நூற்றாண்டில் இந்தியாவில் நிறைய விஷயங்கள் நடந்துள்ளன. அது வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான அடிப்படையை வலிமையாக்கியுள்ளது. உதாரணமாக, ஆகஸ்ட் 23ம் தேதி நாட்டின் முதல் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் சிவ – சக்தி புள்ளியில் தரையிரங்கியது. நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய உலகின் முதல் நாடு இந்தியாதான். வெண்வெளித்துறை சீர்திருத்தத்தின் மூலம் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் பயனடைந்துள்ளனர்” என தெரிவித்தார். மேலும், சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்ட ஸ்பேஸ்டெக் ஸ்டார்ட்-அப் கேலக்ஸ் ஐ குழுவுடன் மோடி கலந்துரையாடினார்.

பிரதமர் தனது உரையில், “அரசியல் பின்புலம் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலில் இணைத்துக்கொள்ளுமாறு இந்தாண்டு செங்கோட்டையில் இருந்து நான் வலியுறுத்தி இருந்தேன். எனது இந்த வேண்டுகோள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பல்வேறு இளைஞர்கள் அரசியலில் இணைய ஆவலுடன் இணைய காத்திருப்பதாக அறிய முடிகிறது.

அவர்கள் அனைவரும் நல்ல வாய்ப்புக்காவும் சிறந்த வழிகாட்டுதலுக்காகவும் காத்திருக்கிறார்கள். இது தொடர்பாக நாடு முழுவதிலும் இருந்து இளைஞர்களிடம் இருந்து எனக்கு கடிதம் வருகிறது. சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் எனக்கு பல ஆலோசனைகளை வழங்குகின்றனர். பல இளைஞர்கள் தங்களின் கடிதங்களில், ‘இது எங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. தாத்தா, பெற்றோர் யாருக்கும் அரசியல் பாரம்பரியம் இல்லாத நிலையில், நாங்கள் அரசியலுக்கு வர விரும்பினாலும் முடிவதில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

சுதந்திர போராட்டத்தின் போது அரசியல் பின்புலம் இல்லாவிட்டாலும், அனைத்து தரப்பில் இருந்தும் மக்கள் போராட முன்வந்தனர். இந்திய சுதந்திரத்துக்காக முழுவதுமாக தங்களை அர்ப்பணித்தனர். இன்று வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற நோக்கத்தை அடைய அதே உணர்வினை நாம் கட்டி எழுப்ப வேண்டும். ஒவ்வொரு வீடும் மூவர்ணக்கொடி; ஒட்டுமொத்த நாடும் மூவர்ணக்கொடி என்ற பிரச்சாரம் இந்தமுறை உச்சம் பெற்றுள்ளது. இந்தப் பிரச்சாரம் தொடர்பான அற்புதமான புகைப்படங்கள் நாட்டின் மூலைமுடுக்கில் இருந்து எல்லாம் வெளியாகின. வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மூவர்ணக்கொடி பறந்ததை நாம் பார்த்தோம்.

மக்கள் தங்களின் கடைகள், அலுவலகங்களிலும் மூவர்ணக்கொடியை ஏற்றினர். அதேபோல், தங்களின் டெக்ஸ்டாப், மொபைல்கள், வாகனங்களிலும் மூவர்ணக்கொடியை வைத்திருந்தனர். ஜம்மு காஷ்மீரில் 750 மீட்டர் நீளமுள்ள மூவர்ணக்கொடி ஊர்வலம் நடத்தப்பட்டது. உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தில் இந்த ஊர்வலம் நடந்தது. அருணாச்சலப்பிரதேசத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் 600 மீட்டர் நீளமுள்ள மூவர்ணக்கொடி ஊர்வலம் நடந்தது.

நாடு முழுவதும் இதுபோன்ற மூவர்ணக்கொடி ஊர்வலங்களில் பலர் கலந்து கொண்டனர். பெண்கள் சுயஉதவிக் குழுவினர் லட்சக்கணக்கான கொடிகளைத் தயாரித்தனர். கொடியின் மூன்று வர்ணங்கள் பூசப்பட்ட பொருள்கள் மின் வணிகம் மூலமாக அதிக அளவில் விற்பனையாகியிருக்கின்றன. சுதந்திர தின கொண்டாட்ட நாளில் நாட்டின் அனைத்து மூலைகளிலும் நிலம், நீர், ஆகாயம் என மூவர்ணக்கொடியே வியாபித்து இருந்தது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தின் பாரேகுரி கிராமத்தில் வசித்து வரும் மோரன் சமூகத்தினர், ஹூலாக் கிம்பன் குரங்குகளுடன் ஆழமான பிணைப்பினைக் கொண்டுள்ளனர். அந்த வகைக் குரங்குகள் வாழைப்பழங்களை அதிகம் விரும்புவதை உணர்ந்து கொண்ட கிராமத்தினர் தங்களின் வயல்களில் வாழை மரங்களை பயிரடத் தொடங்கினர். கிராம மக்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு செய்ததைப் போல கிம்மன்ஸ்களுக்கும் பிறப்பு இறப்பு தொடர்பான சடங்குகளைச் செய்ய முடிவு செய்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு கிம்பன்ஸ் என்றும் பெயரிட்டுள்ளனர்.

அதேபோல் அருணாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், கொம்புகள் மற்றும் பற்களுக்காக வனவிலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க 3-டி தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். நபாம் பாபு மற்றும் லிகா நானா ஆகியோர் தலைமையிலான குழு, விலங்குகளின் பல்வேறு பாகங்களை 3-டி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கின்றனர். பற்கள், கொம்புகள் போன்றவைகளை அத்தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குகின்றனர். பின்பு அவை ஆடை மற்றும் தலைக்கவசங்களாக தயாரிக்கப்படுகின்றன. வனவிலங்குகள் பாதுகாக்கப்படவும், மரபுகள் தொடரவும் இந்தத்துறையில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்வர வேண்டும்” என்றார்.

இதேபோல மத்தியப்பிரதேசத்தின் ஜபுவாவைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் கழிவுகளில் இருந்து அற்புதமான கலைப்பொருள்கள் உருவாக்குவதை பகிர்ந்து கொண்டார். அதேபோல் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உருவாக்கும் இ-கான்ஷியஸ் ஸ்டார்ட் அப் பற்றியும் பிரதமர் பகிர்ந்து கொண்டார். மேலும் தனது உரையில் சமீபத்தில் கொண்டப்பட்ட உலக சமஸ்கிருத நாளைப் பற்றியும் பேசினார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி, “லிதுவேனியாவில் பேராசிரியர் வைடிஸ் விதுனாஸ் ஒரு தனித்துவமான முயற்சியில் இறங்கியுள்ளார். அதற்கு அவர், ‘நதிகளில் சமஸ்கிருதம்’ என்று பெயரிட்டுள்ளார். நேரிஸ் நதியில் ஒருசில குழுவாக கூடி அதன் கரைகளில் வேதங்கள் மற்றும் கீதையை பாராயணம் செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்வு நடந்து வருகிறது” என தெரிவித்தார்.

கேட்ச் தி ரெயின் இயக்கத்திலும் அம்மாவின் பெயரில் ஒரு மரம் இயக்கத்திலும் பங்கேற்க மக்களை வலியுறுத்திய பிரதமர் மோடி,மக்கள் அதிக அளவில் மரங்களை நடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்களின் வாழ்வில் உடல் தகுதி மிகவும் முக்கியமானது என்று கூறிய பிரதமர், “உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு மற்றும் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஃபிட் இந்தியா பிரச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் ஆரோக்கியத்தை பொறுத்தே குடும்பம், சமூகம், நாட்டின் எதிர்காலம் உள்ளது. அவர்களின் ஆரோக்கியத்துக்காக குழந்தைகள் தொடர்ந்து ஊட்டச்சத்தினைப் பெறுவது அவசியம். குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு, நாடு முன்னுரிமை அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப். 1 – 30 வரை ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு போஷான் அபியான் புதிய கல்விக்கொள்கையுடன் இணைக்கப்பட்டது.

இன்னும் சில நாட்களில் பாரா ஒலிம்பிக் பாரிஸில் தொடங்க இருக்கிறது. நாட்டின் சார்பில் கலந்து கொள்ளும் வீரர்களை 140 கோடி இந்தியர்களும் உற்சாகப்படுத்த வேண்டும். மக்கள் Cheer4bharat என்ற ஹேஷ் டேக் மூலம் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், வர இருக்கும் விழாக்களான ஜென்மாஷ்டமி, விநாயக சதூர்த்தி, ஓணம், மிலாது நபி மற்றும் தெலுங்கு வருட பிறப்பு ஆகிவற்றுக்காக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *