National

யார் இந்த ஆதிஷி? – ஆக்ஸ்போர்டு படிப்பு முதல் ‘அப்சல்’ சர்ச்சை வரை! | Who is Atishi, Delhi New Chief Minister background explained

யார் இந்த ஆதிஷி? – ஆக்ஸ்போர்டு படிப்பு முதல் ‘அப்சல்’ சர்ச்சை வரை! | Who is Atishi, Delhi New Chief Minister background explained


டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஜாமீனில் வெளிவந்தவுடன் அறிவித்தார். அப்போதே அமைச்சர் ஆதிஷி அடுத்த முதல்வராக வாய்ப்பு உள்ளதாகப் பேசப்பட்ட நிலையில் தற்போது அது உண்மையாகியுள்ளது. அரவிந்த கேஜ்ரிவால் மனைவியின் பெயர் முதல்வர் பதவிக்கு அடிபட்டது. ஆனால், அவரை எல்லாம் பின்னுக்குத் தள்ளி முதல்வராக ஆதிஷி முடி சூடியது எப்படி? அதிஷியின் பின்புலம் என்ன? – விரிவாகப் பார்க்கலாம்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையிலிருந்த கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை பேசும்போது, “முதல்வர் பதவியை 2 நாட்களில் ராஜினாமா செய்வேன். மக்கள் எனக்கு மீண்டும் வாக்களித்த பிறகு மீண்டும் அப்பதவியில் அமர்வேன்’’ என்றார்.

இதனிடையே, அரவிந்த் கேஜ்ரிவாலும் அவரது முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவும் கேஜ்ரிவாலின் இல்லத்தில் சந்தித்து, டெல்லி அரசை அடுத்து வழிநடத்தக்கூடியவர் யார் என்பது குறித்து விவாதித்தனர். அதனைத் தொடர்ந்து கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூடி விவாதித்தது. முன்னதாக, “அரவிந்த் கேஜ்ரிவாலைப் போலவே நானும் மக்கள் மன்றத்திடம் போக இருக்கிறேன். தேர்தலில் மக்கள் என் நேர்மையை அங்கீகரித்தால், மீண்டும் நான் பதவியில் அமர்வேன்” என்று மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.

யார் இந்த ஆதிஷி?- 1981-ம் ஆண்டு ஆதிஷி பிறந்தார். இவரது பெற்றோர் இருவருமே டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள். இவர் 2001-ம் ஆண்டு இளங்கலை வரலாற்றுப் படிப்பை முடித்துள்ளார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2003-ம் ஆண்டு உதவித்தொகை பெற்று முதுகலை வரலாறு படித்துள்ளார்.

அரசியல் பயணம் தொடங்கியது எப்படி? – ஆம் ஆத்மி கட்சியில் 2013-ம் ஆண்டு இணைந்தார். அரசின் ஆலோசகராக இருந்தவர் 2020-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஆம் ஆத்மியின் முக்கியமான தலைவர்கள் கைதான நிலையில்தான் இவருக்கு கேபினட்டில் இடம் வழங்கப்பட்டது. தற்போது கல்வி மற்றும் பொதுப்பணித் துறை (PWD) என முக்கியமான இலாகாக்களை தன் கையில் வைத்திருக்கிறார்.

மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் சட்டப் போராட்டங்களில் சிக்கியுள்ளனர். இதனால், ஆம் ஆத்மியில் தலைமைக்கான வெற்றிடம் இருந்து வந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆதிஷி. துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக பணியாற்றியபோது பள்ளி வசதிகளை மறுவடிவமைப்பதிலும், கற்பித்தல் தரத்தை உயர்த்துவதிலும் பல முயற்சிகளை தொடங்குவதிலும் அவர் முக்கிய பங்காற்றினார். இது அரவிந்த் கேஜ்ரிவால் அரசின் முக்கியமான நகர்வாகப் பார்க்கப்பட்டது.

முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால் சிறையிலிருந்தபோது நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டவர் ஆதிஷிதான். மேலும் அவர் கட்சியின் பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். சௌரப் பரத்வாஜுடன் இணைந்து, மக்களவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரங்களுக்குத்த் தலைமை தாங்கினார். தவிர, ஊடகங்களுக்கு நன்கு அறியப்பட்ட நபராக ஆனார். சமீபத்தில் ஹரியானா – டெல்லி தண்ணீர் பிரச்சினையின்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு கவனம் ஈர்த்தார்.

இப்படியாக ஆம் ஆத்மியின் முக்கியமான தலைவராக வலம் வந்த ஆதிஷிக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, அரவிந்த் கேஜ்ரிவால் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது தொடங்கிப் பல பெயர்கள் அடிபட்டன. இந்தநிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்தில், அடுத்த முதல்வராக அமைச்சர் ஆதிஷியின் பெயரை அரவிந்த் கேஜ்ரிவால் முன்மொழிந்தார். இதற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக ஆதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கட்சிக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஆதிஷி , “இந்த மகத்தான பொறுப்பை நான் சுமக்கும் வரை, எனக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருக்கும். அது அரவிந்த் கேஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக்க வேண்டும். டெல்லி மக்களை பாதுகாக்கவும், அரவிந்த் கேஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ் ஆட்சியை நடத்தவும் முயற்சிப்பேன்” எனப் பேசினார்.

ஆனால், ஆதிஷியின் இந்த நியமனத்துக்கு ஆம் ஆத்மி ராஜ்ய சபா எம்.பி ஸ்வாதி மாலிவால் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர், “இது டெல்லிக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான நாள். தீவிரவாதி அப்சல் குருவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற ஆதிஷியின் சொந்தக் குடும்பம் போராடியது. அப்சல் குரு நிரபராதி என்றும், அவரை தூக்கிலிடக்கூடாது என்றும், அரசியல் சதியால் பாதிக்கப்பட்டவர் என்றும் குடியரசுத் தலைவரிடம் பலமுறை கருணை மனுக்கள் கொடுத்தனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆதிஷி போன்ற பெண் டெல்லியின் முதல்வராகப் போகிறார். இவர் ’டம்மி முதல்வர்’ தான். டெல்லி மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தீவிரவாதிக்கு ஆதிஷி பெற்றோர் ஆதரவா? – 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்சல் குருவின் விடுதலைக்கு குரல் கொடுக்க குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளரே ஆதிஷியின் தாய் திருப்தா வாகி தான். தந்தை விஜய் சிங் அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்தவர். அப்சல் குரு தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு வழங்கிய கருணை மனுவில் இவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அந்தக் கடிதத்தில் 57, 58 வது நபர்களாக இவர்களின் இருவர் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. மேலும், அப்சல் குருவுக்கு ஆதரவாக ஆதிஷியின் தாய் பேசிய பழைய வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இப்படி தீவிரவாதிக்கு தொடர்புள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஆதிஷி தலைநகர் டெல்லியின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது தவறானது எனப் பலரும் தங்களின் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

எனினும், ஆம் ஆத்மியில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் கேபினட் மினிஸ்டர் என்னும் அடிப்படியில் டெல்லியின் 3-வது பெண் முதல்வராகப் பதவியேற்கும் ஆதிஷிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *