உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் X உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின் CEO, தலைவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் பல விதமான வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரித்து விற்கப்படுகிறது. மேலும், இந்த நிறுவனம் புதிய முயற்சியாக `ரெடிமேட் வீட்டையும்” விற்பனைக்குக் கொண்டு வரப் போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதுவும் 10,000 டாலர் – 15,000 டாலருக்குள்ள அந்த ரெடிமேடு வீட்டை விற்கப் போவதாகக் கூறப்படுகிறது… இதை நம்பலாமா?
அலசி ஆராய்ந்ததில், இது `எலான் மஸ்க் ரிவைண்ட்’ என்கிற யூடியூப் சேனலில்தான் முதலில் பதிவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நிறைய சேனல்கள் இதே பதிவைப் பகிர்ந்திருக்கின்றன. இந்த வீடியோக்களின் தம்ப் நைல்ஸ் என்னவோ, டெஸ்லா வீடும் அருகில் எலான் மஸ்க் இருப்பது போன்று தான் இருக்கிறது. அதனால், சட்டென அனைவரும் வீடியோவில் என்னதான் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, வீடியோவை முழுமையாகப் பார்க்கின்றனர். ஆனால், அந்த வீடியோவில் ஒன்றுமேயில்லை…
இது வெறும் மாடல் தான்!
அதாவது இந்த `டெஸ்லா டைனி ஹௌஸ்’ எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பொருள்களைச் சோதனை செய்வதற்காகவும், அவற்றின் பயன்பாட்டைக் காட்சிப்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரிதான். குறிப்பாக சூரிய ஆற்றலையும், காற்று ஆற்றலையும் உபயோகிப்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி இது சந்தையில் விற்பனைக்கு வரப்போவதாக அதிகாரபூர்வமான எந்த தகவலும் டெஸ்லாவிடம் இருந்து வரவில்லை. இந்த வீடு ஸ்பேஸ் X நிறுவனம் இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.