
அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தது ஆப்கானிஸ்தான் அணி.
கடந்த அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் பங்கேற்று விளையாடிய 10 அணிகளில் ஒன்றாக ஆப்கனும் இருந்தது. இது அந்த அணி பங்கேற்று விளையாடிய மூன்றாவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். பெரும்பாலான விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள், ரசிகர்கள் என அனைவரது கணிப்பையும் தவிடு பொடி ஆக்கும் வகையில் தான் ஆப்கன் வீரர்களின் ஆட்டம் இருந்தது.
தொடர் தொடங்குவதற்கு முன்னர் ஆப்கன், சுழற்பந்து வீச்சில் வலுவான அணியாக பார்க்கப்பட்டது. ரசித், நூர், முஜிப், முகமது நபி ஆகியோர் அந்த அணியில் இருந்தது இதற்கு காரணம். ஆனால், உங்களுக்கு என்ன வேணும்? பேட்டிங் வேணுமா, பவுலிங் வேணுமா, இல்ல தரமான ஃபீல்டிங் வேணுமா. இது எல்லாமே ஒரே பேக்கேஜா எங்க கிட்ட இருக்கு என சொல்லும் வகையில் தான் ஆப்கனின் ஆட்டம் இருந்தது. இந்திய ஆடுகளங்களில் ஆப்கன் வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தார்கள். இலக்குக்கே இலக்கு வைத்து சேஸ் செய்து அசத்தினார்கள் பேட்ஸ்மேன்கள். முதல் பத்து ஓவர்களில் விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர் வேகப்பந்து வீச்சாளர்கள். மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் இம்சித்தனர். அது அனைவரும் தேசம் கடந்து நேசிக்கும் வகையில் அமைந்தது.
முன்னாள் உலக சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தியது. தொடர்ந்து நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டியது. மும்பையில் ஆஸ்திரேலிய அணியின் முதல் 7 விக்கெட்களை 91 ரன்களுக்குள் கைப்பற்றி இருந்தது. ஆனால், மேக்ஸ்வெல் அந்த வெற்றியை ஆப்கனிடம் இருந்து பறித்தார். அடுத்த முறை இது மாதிரியான சூழலை மேலும் திறம்பட ஆப்கன் கையாளும். விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது இயல்பு தானே.
இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றது. வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இது உலகக் கோப்பை தொடரில் ஆப்கனின் சிறந்த செயல்பாடு.
இது ஆப்கன் அணி சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளதன் தொடக்கப்புள்ளி. அந்த அணிக்காக விளையாடும் வீரர்கள் பலர் உலக அளவில் நடைபெறும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். முக்கியமாக இளம் வீரர்கள் அதிகம் நிறைந்த அணிகளாகவும் உள்ளது. இந்த அனுபவம் அனைத்தும் வரும் நாட்களில் அந்த அணிக்கு ஒரு சேர கைக்கொடுக்கும். அப்போது சாம்பியன் பட்டம் வெல்லும் ரேஸில் ஆப்கனும் ஒரு அணியாக இருக்கும். விளையாட்டின் ஊடாக தங்கள் நாட்டு மக்களுக்கு ஆறுதலும் தெரிவித்திருந்தனர் ஆப்கன் வீரர்கள். இப்போது தொடரிலிருந்து வெளியேறினாலும் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளது ஆப்கன். அதன் காரணமாக பலரும் ஆப்கன் அணிக்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.
Thank You Afghanistan…