கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரி ன் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர்.
உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய தெம்பா பவுமா மற்றும் குவிண்டன் டி காக் இணை களமிறங்கியது. ஆனால், ஆட்டத்தின் முதல் ஓவரே பவுமா விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் ஸ்டார்க். நடப்பு தொடரில் 4 சதங்களை விளாசி, 591 ரன்கள் வேட்டையாடி அசத்தல் ஃபார்மில் இருக்கும் குவிண்டன் டி காக் இம்முறையும் சிறப்பாக ஆடக்கூடும் என எதிர்பார்த்த நிலையில், அவர் 3 ரன்களில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஆமை வேகத்தில் ஆடியது அந்த அணி. எனினும், எய்டன் மார்க்ரம் 10 ரன்கள், ராஸி வான் டெர் டஸ்ஸன் 31 பந்துகளில் 6 ரன்கள் என தென் ஆப்பிரிக்காவின் டாப் ஆர்டரை அலறவைத்தனர் ஆஸி பவுலர்கள் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட்.
இதன்பின் ஹெய்ன்ரிச் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இணைந்து நிதானமாக ஆடினர். இதனால் 3 ரன் ரேட்டை தொட்டது அந்த அணி. 95 ரன்களை பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்த இக்கூட்டணியை டிராவிஸ் ஹெட் பிரித்தார். 47 ரன்கள் எடுத்திருந்த ஹெய்ன்ரிச் கிளாசனையும், அடுத்துவந்த மார்கோ யான்சனையும் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் வீழ்த்தி அசத்தினார் டிராவிஸ் ஹெட்.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவின் லோ ஆர்டர் வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும், டேவிட் மில்லர் நங்கூரமாக நிலைத்து ஆடினார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் சதம் பூர்த்தி செய்த நிலையில், ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் அவரை வீழ்த்தினார். 101 ரன்களில் மில்லர் வெளியேறினார். இறுதியில் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த தென் ஆப்பிரிக்கா 212 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 213 ரன்கள் எடுத்தால் 6வது உலகக் கோப்பை பைனலில் பங்கேற்கும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது.