கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் முதல் கோப்பை கனவை தகர்த்த ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவின் முதல் கோப்பை கனவை தகர்த்தது ஆஸ்திரேலிய அணி. இதன்மூலம், வரவிருக்கும் நவம்பர் 16ம் தேதி இந்தியா உடன் பைனலில் ஆஸ்திரேலிய அணி மோதவுள்ளது உறுதியாகியுள்ளது.
213 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் அதிரடியான துவக்கம் கொடுக்க முயற்சித்தார். ஆனால், 29 ரன்களில் எதிர்பாராவிதமாக மார்க்ரம் பந்துவீச்சில் அவுட் ஆக, அடுத்துவந்த மிட்செல் மார்ஷ் பூஜ்ஜியத்தில் நடையைக்கட்டினார். இதனால் ஆஸ்திரேலிய அணி சற்று தடுமாறியது. எனினும், விக்கெட் சரிவை பற்றி கவலைப்படாமல் டிராவிஸ் ஹெட் தனது பாணியிலான ஆட்டத்தை கையிலெடுத்தார். ஸ்மித் இதற்கு உறுதுணையாக இருக்க, பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்தார் டிராவிஸ் ஹெட். கேசவ் மகராஜ் பந்தில் 62 ரன்களில் ஹெட் அவுட் ஆனாலும், அவர் ஆட்டமிழக்கும்போது இலக்கில் பாதியை அதாவது 106 ரன்களை எட்டியிருந்தது ஆஸ்திரேலியா.
இதன்பின், மார்னஷ் லபுஷேன் 18 ரன்கள், மேக்ஸ்வெல் ஒரு ரன் திடீர் விக்கெட் சரிவுக்கு மத்தியில் ஸ்மித் பொறுப்புணர்வுடன் விளையாடி 62 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து விக்கெட்டானார். விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஷ் ஸ்லோவாக ஆடி 28 ரன்கள் எடுத்த நிலையில் ஜெரால்ட் கோட்ஸி பந்துவீச்சில் போல்டானார். ஸ்மித்தும் கோட்ஸி பபந்துவீச்சில் விக்கெட்டானது குறிப்பிடத்தக்கது. ஜோஷ் இங்கிலிஷ் ஆட்டமிழப்புக்கு பின் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. ஏனென்றால், 61 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றாலும், டெயிலென்டர் பேட்ஸ்மேன்களே மீதமிருந்தனர். இதனால் வெற்றி யார் பக்கம் என்ற சுவாரஸ்யம் உண்டானது.
ஆனால், பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். 16 பந்துகள் மீதமிருக்கையில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்களை இழந்து 215 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கம்மின்ஸ் 14 ரன்களும், ஸ்டார்க் 16 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கோட்ஸி, ஷம்சி தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ்: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய தெம்பா பவுமா மற்றும் குவிண்டன் டி காக் இணை களமிறங்கியது. ஆனால், ஆட்டத்தின் முதல் ஓவரே பவுமா விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் ஸ்டார்க். நடப்பு தொடரில் 4 சதங்களை விளாசி, 591 ரன்கள் வேட்டையாடி அசத்தல் ஃபார்மில் இருக்கும் குவிண்டன் டி காக் இம்முறையும் சிறப்பாக ஆடக்கூடும் என எதிர்பார்த்த நிலையில், அவர் 3 ரன்களில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஆமை வேகத்தில் ஆடியது அந்த அணி. எனினும், எய்டன் மார்க்ரம் 10 ரன்கள், ராஸி வான் டெர் டஸ்ஸன் 31 பந்துகளில் 6 ரன்கள் என தென் ஆப்பிரிக்காவின் டாப் ஆர்டரை அலறவைத்தனர் ஆஸி பவுலர்கள் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட்.
.
இதன்பின் ஹெய்ன்ரிச் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இணைந்து நிதானமாக ஆடினர். இதனால் 3 ரன் ரேட்டை தொட்டது அந்த அணி. 95 ரன்களை பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்த இக்கூட்டணியை டிராவிஸ் ஹெட் பிரித்தார். 47 ரன்கள் எடுத்திருந்த ஹெய்ன்ரிச் கிளாசனையும், அடுத்துவந்த மார்கோ யான்சனையும் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் வீழ்த்தி அசத்தினார் டிராவிஸ் ஹெட்.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவின் லோ ஆர்டர் வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும், டேவிட் மில்லர் நங்கூரமாக நிலைத்து ஆடினார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் சதம் பூர்த்தி செய்த நிலையில், ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் அவரை வீழ்த்தினார். 101 ரன்களில் மில்லர் வெளியேறினார். இறுதியில் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த தென் ஆப்பிரிக்கா 212 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.