
கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற தனது கடைசி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதில் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ் 59 ரன்கள், ஜோ ரூட் 60 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 84 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டும், ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 2 விக்கெட்டும், இஃப்திகார் அகமது ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டுமெனில், இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்களை இலக்கை 6.2 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் உருவானது. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத இந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் இங்கிலாந்துக்கு எதிராக 30/2 என்ற நிலையில் மட்டுமே இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பந்தே அப்துல்லா ஷபீக் ஆட்டமிழந்தார். அவரின் விக்கெட்டை வீழ்த்திய டேவிட் வில்லி தனது அடுத்த ஓவரில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஜமானையும் அவுட் ஆக்கி அதிர்ச்சியளித்தார்.
அதன்பின்னும் பாகிஸ்தான் சரிவை சந்தித்தது. முன்னணி வீரர்களான பாபர் அஸம் 38 ரன்களும், ரிஸ்வான் 36 ரன்களும், சவுத் ஷகீல் 29 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதன்பின் வந்தவர்களில் ஆஹா சல்மான் மட்டும் 51 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
அதேநேரம், 93 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து நடப்பு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது வெற்றியை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய டேவிட் வில்லி அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.