
சவுதாம்ப்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழை காரணமாக இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் தலா 34 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
நியூஸிலாந்து அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடர் சமனில் முடிந்தது. பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி சவுதாம்ப்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 34 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் இடம் பிடித்த முதல் 4 பேர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இருந்தும் 7-வது பேட்ஸ்மேனாக விளையாடிய லிவிங்ஸ்டன், 78 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார். சாம் கர்ரன் 42 ரன்கள் எடுத்தார். அது அணிக்கு உதவியது.
227 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. சீரான இடைவெளியில் அந்த அணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். டேரில் மிட்செல், 52 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். வில் யங், 33 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இங்கிலாந்து பவுலர்கள் டேவிட் வில்லி மற்றும் ரீஸ் டாப்லி தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர். மொயின் அலி, 2 விக்கெட்கள் மற்றும் அக்டின்சன் 1 விக்கெட் வீழ்த்தினார். 26.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தற்போது இந்த தொடர் 1-1 என சமனில் உள்ளது.