திருநெல்வேலி/சென்னை: திருநெல்வேலி – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் உட்பட 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இதற்கிடையே, திருநெல்வேலி – சென்னை ரயிலுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்ட நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களின் முன்பதிவு முடிந்தது.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் இன்று உதய்பூர்-ஜெய்ப்பூர், திருநெல்வேலி-சென்னை (மதுரை வழி), ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை (ரேணிகுண்டா வழி), பாட்னா-ஹவுரா, காசர்கோடு – திருவனந்தபுரம், ரூர்கேலா-புரி (புவனேஸ்வர் வழி), ராஞ்சி-ஹவுரா மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
திருநெல்வேலி- சென்னை ரயில் சேவை தொடக்க நாளில் ரயிலில் பயணிகள் பயணிக்க அனுமதி கிடையாது. தொடக்க விழாவையொட்டி இந்த ரயிலை வரவேற்பதற்காக கூடுதல் நிறுத்தங்களில் ரயிலை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை-சென்னை எழும்பூர், விஜயவாடா-சென்னை சென்ட்ரல், காசர்கோடு- திருவனந்தபுரம் இடையிலான 3 வந்தே பாரத் ரயில்களுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலின் (எண்: 20665) வழக்கமான சேவை வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைடையும்.
திருநெல்வேலி- சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20666) சேவை வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. இந்த ரயில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு சென்னையை வந்தடையும். இரு மார்க்கங்களிலும் செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்களும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ஏசி சேர் கார் வகுப்புக்கு ரூ.1,665, எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்புக்கு ரூ.3,055 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து விருதுநகருக்கு ஏசி சேர் கார் வகுப்புக்கு ரூ.1,450, எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்புக்கு ரூ.2,675 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மதுரைக்கு ஏசி சேர் கார் வகுப்புக்கு ரூ.1,365, எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்புக்குரூ.2,485, திருச்சிக்கு ஏசி சேர் கார்வகுப்புக்கு ரூ.895, எக்ஸிகியூடிவ்சேர் கார் வகுப்புக்கு ரூ.1,740, விழுப்புரத்துக்கு ஏசி சேர் கார் வகுப்புக்கு ரூ.600, எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்புக்கு ரூ.1,145 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- விஜயவாடா இடையிலான வந்தே பாரத்ரயில் (20677-20678) சேவை வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஏசி சேர் வகுப்பு ரூ.1,320, எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்புக்கு ரூ.2,540 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல, காசர்கோடு-திருவனந்தபுரம் இடையிலான வந்தே பாரத்ரயிலின் ஏசி சேர் கார் வகுப்புக்கு ரூ.1,555, எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்புக்கு ரூ.2,835 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வந்தே பாரத் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.
இந்நிலையில் நெல்லை-சென்னை எழும்பூர் ரயிலுக்கான முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வருவதற்கு நாளைமுதலும், திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வதற்கு 27-ம் தேதி முதலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வரும் நவம்பர் 12-ம் தேதி தீபாவளிக்கு முந்தைய, நவம்பர் 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களிலும் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வருவதற்கு சாதாரண ஏசிபெட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முடிவடைந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி நவம்பர் 9-ம் தேதி காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 36, 10-ம் தேதி 111, 11-ம் தேதி 54 என்று இருந்தது. இதுபோல் தீபாவளி முடிந்த மறுநாள் 13-ம் தேதி திருநெல்வேலியிருந்து சென்னைக்கு செல்வதற்கான டிக்கெட்டுகளும் தீர்ந்தன.
இதனிடையே திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் நேற்று மும்முரமாக நடைபெற்றது. பிரதமர் காணொலி காட்சி வாயிலாக பேசுவதற்கு ஏற்ற டிஜிட்டல் திரை மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.