காற்றாலைக்கான கியர்பாக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்தில் தனியிடம் பிடித்துள்ள இசட்.எஃப் (ZF) எனும் நிறுவனம் தனது கோவை யூனிட்டில் 50 ஜிகா வாட்ஸ் காற்றாலை சக்திக்கான கியர்பாக்ஸ்களை தயாரித்து இந்தியாவின் முதல் தொழிலகம் என்ற பெருமையை அடைந்துள்ளது.
உலகளவில் மிகப்பெரிய விண்டு மில் கியர்பாக்ஸ் தொழிற்சாலையாக உள்ள இசட்.எஃப் (ZF) விண்ட் பவர் நிறுவனம் தனது கோவை கிளையில் அதிகபட்சமாக 50 ஜிகா வாட்ஸ் மின்சக்திக்கான கியர்பாக்ஸ்களை தயாரித்து இந்தியாவின் முதல் விண்ட் மில் தொழிலகம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இது குறித்து கோவை கருமத்தம்பட்டி பகுதியில் இயங்கி வருகின்ற இசட்.எஃப் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய இசட்.எஃப் குழுமத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பேராசிரியரும், டாக்டருமான பீட்டர் லைய்யர் கூறியதாவது;
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் இசட்.எஃப் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியானது தற்போது 60 ஏக்கர் பரப்பளவில் 1000 பணியாளர்களுடன் இக்காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கும் அதிக அளவிலான காற்றாலை மின் உற்பத்தி கியர்பாக்ஸ்களை வடிவமைத்து வழங்கி வருகின்றதால் இந்தியாவின் முன்னணி கியர் பாக்ஸ் வடிவமைப்பு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
மேலும் தனது உற்பத்தி திறன் மற்றும் வசதிகளை விரிவுபடுத்த இசட்.எஃப் குழுமம் முனைப்பு காட்டி வருவதுடன் அதற்கான செயல்பாட்டை முன்னிறுத்தியது. இதற்காக கோவை நிறுவனத்திற்கு மட்டும், சுமார் 230 மில்லியன் தொகையை செலவு செய்து விரிவுபடுத்தியது.
இதன் காரணமாக இந்நிறுவனத்தில் 50 ஜிகா வாட்ஸ் காற்றாலை மின் சக்திக்கான கியர் பாக்ஸ்களை தயாரித்து இந்தியாவின் முதல் விண்ட் பவர் தொழிலகம் என்ற பெருமையை அடைந்துள்ளது என்றார்.
இதே வேகத்தில் பணியாற்றும் பொழுது வருகின்ற 2030 ஆம் ஆண்டு இந்திய திருநாட்டில் தற்பொழுது உள்ள அளவீட்டின் படி, இரண்டு மடங்கு காற்றாலை உற்பத்தியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும் காற்றாலை உற்பத்தி செயல்பாடுகளில் சுற்று சூழல் பாதிப்பை பெரிதும் குறைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதுடன், 2040ம் ஆண்டுக்குள் கார்பன் நடு நிலைமை என்ற குறிக்கோளுடன் பசுமையான எதிர்காலத்திற்கு ஏற்ற பங்களிப்பை வழங்க, நவீன தொழில்நுட்பங்களையும், செயல்முறைகளையும், பயன்படுத்தும் சிறந்த தொழிலகமாக கோவை கிளை திகழ்ந்து வருகின்றது என்றார்.
நிகழ்வின் பொழுது இசட்.எஃப் குழுமத்தின் தலைவர் ஆகாஷ் பாஸ்ஸி தலைமை செயல் அதிகாரி பெலிக்ஸ் – ஹென்செலர் நிர்வாக இயக்குநர் தீபக் பொஹெகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“