
புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெண்களின் எண்ணிக்; கை 12 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது.
மகளிர் இடஒதுக்கீடு சட்டம் கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார். இதன்படி மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும் மக்களவை தொகுதி மறுவரையறை காரணமாக வரும் 2029 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதுதான் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. இந்த சூழலில் தற்போது சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக சார்பில் 14 பெண்களும், காங்கிரஸ் சார்பில் 3 பெண்களும் போட்டியிடுகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் பாஜக – 28, காங்கிரஸ் – 30, மிசோரமில் பாஜக – 4, காங்கிரஸ் – 2, ராஜஸ்தானில் பாஜக – 20, காங்கிரஸ் – 28, தெலங்கானாவில் பாஜக – 14, காங்கிரஸ் – 11 என்ற வகையில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்த 5 மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்தால் மட்டுமே இந்த நிலை மாறும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.