
சென்னை: கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களை கடந்த மே மாதம் மட்டும் 10.98 லட்சம் பேர் உட்பட கடந்த 5 மாதத்தில் 27.31 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்துஅதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கோடை காலத்தில் குளிர் சீசனை அனுபவிக்க அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கும் முன்பே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஏப்ரல், மே மாதம் முழுவதும் கொடைக்கானல் நகரம் நிரம்பி வழிந்தது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, குணா குகை, ரோஸ் கார்டன், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கடந்த ஏப்ரல் மாதம் 6 லட்சத்து 46 ஆயிரத்து 465 சுற்றுலா பயணிகளும், கடந்த மே மாதம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 9 சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்துள்ளனர்.
2023 ஜனவரி முதல் மே மாதம் வரை மொத்தம் 27 லட்சத்து 31 ஆயிரத்து 641 பேர் கொடைக்கானலை பார்வையிட்டு சென்றுள்ளனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் பயணிகளின் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.