Cinema

2023 பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் எப்படி இருக்கும்?- ஓர் அலசல் | this year Indian box office collection review jailer to jawan

2023 பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் எப்படி இருக்கும்?- ஓர் அலசல் | this year Indian box office collection review jailer to jawan


ஒரு காலத்தில் இந்தியா சினிமாக்கள் என்றால் அது இந்தி சினிமா தான் என்று சொல்லும் அளவுக்கு பாலிவுட்டின் ஆதிக்கம் பரவியிருந்தது. ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய திரைத்துறையான இந்தி திரைப்படத்துறைக்கு கடந்த ஆண்டு பாக்ஸ் ஆஃபீஸில் சரியான அடி. பாலிவுட் தவிர்த்த மற்ற தென்னிந்திய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தனர். ரெக்கார்ட் ப்ரேக்கர் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ கடந்தாண்டின் சோகத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் சோகத்தையே கூட்டியது.

இந்த பாலிவுட் பாக்ஸ்ஆஃபீஸின் வீழ்ச்சியை இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ஷாருக்கானின் ‘பதான்’ தடுத்து நிறுத்தி ரூ.1000 கோடி வசூலித்து ஆசுவாசப்படுத்தியது. ஆனாலும் தற்போது பாக்ஸ் ஆஃபீஸை எடுத்துகொண்டால் தென்னிந்திய சினிமாக்களின் பங்கு என்பது குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேறியிருக்கிறது.

ஆர்மேக்ஸ் மீடியாவின் அறிக்கையின் படி 2023-ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் 37 சதவீதம் இந்தி படங்களின் பங்கு எனவும், இந்தி அல்லாத தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிப்படங்கள் 51 சதவீதம் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்கள் 12 சதவீதம் வருவாயை பெற்றுகொடுத்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துகொண்டால் இந்திப் படங்கள் மட்டும் பாக்ஸ் ஆஃபீஸில் 60 சதவீத பங்களிப்பை செலுத்தியிருந்தன. இந்த பெரிய அளவிலான மாற்றத்துக்கு காரணம் கரோனா.

கரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு இந்தி பேசும் மாநிலங்களில் மீண்டும் ரசிகர்களை திரையரங்குகளில் கொண்டு வர போராடவேண்டியிருந்தது. கூடுதலாக ஓடிடி தளங்களின் வளர்ச்சி பார்வையாளர்களுக்கு நேர்த்தியான சினிமாவின் மீதான பசியை தூண்டியது. தாங்கள் ஏற்கெனவே பார்த்து பழகிய படங்களை மீண்டும் ரீகிரியேட் செய்து ‘அரைத்த மாவை’க் காண அவர்கள் தயாராக இல்லை. தென்னிந்தியப் படங்கள் சோபித்த அதே நேரத்தில் அந்தப்படங்களின் டப்பிங் வெர்ஷன்கள் ‘ஆர்ஆர்ஆர்’, ‘புஷ்பா’, ‘கேஜிஎஃப்’ போன்றவை இந்தி பேசும் மாநில திரையரங்குகளில் சோபித்தன.

தற்போது இந்தி சினிமா இந்தாண்டு மீண்டெழுந்து வருகிறது. குறிப்பாக சன்னி தியோலின் ‘கதார் 2’ (Gadar 2) ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.600 கோடி வசூலை குவித்து மாஸ் காட்டியுள்ளது. போலவே அக்ஷய்குமாரின் ‘ஓஎம்ஜி 2’ ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.220 கோடி வரை வசூலித்துள்ளது. ஷாருக்கானின் ‘ஜவான்’ ரூ.800 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

தமிழில் ‘ஜெயிலர்’ ரூ.600 கோடியை குவித்து சாதனை படைத்துள்ளது. அடுத்து விஜய்யின் ‘லியோ’ ரஜினி பட சாதனையை முறியடித்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. தெலுங்கு சினிமாவுக்கு ‘பேபி’ ரூ.90 கோடியையும், மலையாள சினிமாவுக்கு ‘2018’ ரூ.180 கோடி வரை பெற்றுதந்துள்ளது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஹாலிவுட் படங்கள் இந்தாண்டு பாக்ஸ் ஆஃபீஸில் முக்கிய பங்காற்றியிருப்பது மறுக்க முடியாது. ‘பார்பி’, ‘ஓப்பன்ஹெய்மர்’, ‘மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெக்கனிங் பார்ட் ஒன்’, ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்’ படங்கள் குறிப்பிட்ட வசூலை நிகழ்த்தியுள்ளன.

தனித்தனியான படங்களின் வசூல் நிலவரம் ஒருபுறம் இருந்தாலும் ஒட்டுமொத்தமான இந்திய திரைப்படத்துறையின் வசூல் என்பது கடந்த ஆண்டைக்காட்டிலும் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் தான் முழுமையான விபரம் தெரிய வரும் என்றாலும், ஜனவரி – ஜூன் மாதத்தை கணக்கில் கொண்டால் மொத்தமாக ரூ.4,868 கோடி வசூலாகியுள்ளதாக ஆர்மேக்ஸ் மீடியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2022-ம் ஆண்டைக்காட்டிலும் 15 சதவீதம் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் மொத்தமாக ரூ.10,637 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு அடுத்தடுத்து முன்னணி படங்கள் வெளியாக உள்ளதால் கடந்தாண்டின் எண்ணிக்கையை விட கூடுதல் கலெக்ஷன் நிகழலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.





Source link

About Author

tamilnewspapper.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: