ஓசூர்/கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் தருமபுரி உட்பட 5 மாவட்ட மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நேற்று முன் தினம் காலை விநாடிக்கு 4,480 கனஅடி நீர்வரத்து உயர்ந்தது. இந்நிலையில் மழை குறைந்ததால், நேற்று காலை விநாடிக்கு 2,207 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2,240 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 24.9 அடியாக உள்ளது. இந்த தண்ணீர் அலியாளம், எண்ணேகொள்புதூர் உள்ளிட்ட 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணையை வந்தடைகிறது. இதேபோல், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,290 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 1,403 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.35 அடிக்கு நீர்மட்டம் உள்ளதால், அணையின் பாதுகாப்பை கருதி நீர்வரத்து முழுவதும் ஆற்றிலும், பாசன கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்வதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றங்கரையை கடக்கவோ, துணிகளை துவைக்கவோ வேண்டாம். கால்நடைகளை ஆற்றின் அருகே கட்டி வைக்கவும் வேண்டாம் என நீர்வளத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.