மல்யுத்தம், குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பவர்கள் எடை பரிசோதனைக்கு முன்னர் பொதுவாகவே உணவு மற்றும் தண்ணீரை அருந்துவதில் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பார்கள். மேலும் நீராவி குளியலும் எடுத்துக் கொள்வார்கள். எடை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த முயற்சிகளால் உடல் பலவீனம் அடையும். இழந்த ஆற்றலை மீட்டெடுக்கும் விதமாக எடை பரிசோதனை முடிவடைந்ததும் குறைந்த அளவிலான தண்ணீரை போட்டியாளர்கள் பருகுவார்கள். அதேவேளையில் அதிக ஆற்றல் கொண்ட உணவை எடுத்துக் கொள்வார்கள். அப்போதுதான் போட்டியின் போது வலுவாக செயல்பட முடியும்.
இந்த வகையிலேயே வினேஷ் உணவை எடுத்துக்கொண்டுள்ளார். அரை இறுதி ஆட்டம் முடிவடைந்ததும் வினேஷ் போகத்தின் உடல் எடை அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர், எடுத்துக் கொண்ட உணவால் அவரது எடை 1.5 கிலோ வரை அதிகரித்திருக்கக் கூடும் என ஊட்டச்சத்து நிபுணர் கணக்கிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து வினேஷ் போகத் உடல் எடையைக் குறைப்பதற்காக விடிய விடிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். சைக்கிள் ஓட்டுதல், கடின பயிற்சிகள் மூலம் உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைப்பது என பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். ஆனால் கடைசியில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
100 கிராம் எடையை குறைக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களிடம் கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் அதை போட்டி அமைப்பாளர்கள் ஏற்க மறுத்ததுடன் உடனடியாக வினேஷ்போகத்தை தகுதி நீக்கம் செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். மேலும் அரை இறுதியில் வினேஷ் போகத்தோற்கடித்த கியூபா வீராங்கனையான யூஸ்னிலிஸ் குஸ்மேன் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சாரா அன் ஹில்டெப்ராண்டுடன் மோதுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் தீன்ஷா பர்திவாலா கூறும்போது, “வினேஷ் போகத் விளையாடிய 3 ஆட்டங்களின் போது அவருக்கு குறைந்த அளவிலான தண்ணீரே அருந்துவதற்கு வழங்கப்பட்டது. அதுவும் நீர்ச்சத்து இழப்பை தடுப்பதற்காகவே கொடுக்கப்பட்டது. போட்டி முடிவடைந்ததும் அவரது உடல் எடை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பயிற்சியாளர், வினேஷ் போகத்துக்கு எப்போதும்போல சாதாரண எடை குறைப்பு செயல்முறையைத் தொடங்கினார்.
இதன் வாயிலாக எடையை குறைத்துவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், வினேஷ்போகத் 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது தலைமுடியை வெட்டுவது உட்பட அனைத்து கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அவர் அனுமதிக்கப்பட்ட எடையான 50 கிலோவுக்கு குறையவில்லை” என்றார்.
இதனிடையே ஒலிம்பிக் கிராமத்தில் சிகிச்சை பெற்று வந்த வினேஷ் போகத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா சந்தித்து உரையாடினார்.இதன் பின்னர் பி.டி. உஷா கூறும்போது, “வினேஷ் போகத்துடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் முற்றிலும் இயல்பான நிலையில் உள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர், ஏமாற்றமடைந்துள்ளார். அவரிடம், இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய அரசு மற்றும் ஒட்டுமொத்த நாடும் ஆதரவாக இருப்பதாக கூறினேன்.
வினேஷை தகுதி நீக்கம் செய்வதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உலக மல்யுத்த கூட்டமைப்பிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத்துடன் இணைந்து டாக்டர் தீன்ஷா பர்திவாலா தலைமையிலான மருத்துவக் குழு மற்றும் செஃப்-டி-மிஷன் ககன் நரங் ஆகியோர் போட்டித் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக இரவு முழுவதும் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளை நான் அறிவேன்” என்றார்.
ஏன் சலுகை இல்லை? – ரியோ ஒலிம்பிக், டோக்கியோ ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் 53 கிலோ எடைப் பிரிவில்தான் பங்கேற்றார். ஆனால் இந்த பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு மற்றொரு இந்திய வீராங்கனையான அண்டிம் பங்கல் தகுதி பெற்றிருந்தார். இதனால் வினேஷ் 50 கிலோ எடைப் பிரிவுக்கு மாறினார்.
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் மல்யுத்த போட்டியாளருக்கு எடை பரிசோதனையில் ஒரு கிராம் கூட சலுகை வழங்கப்படாது. அதேவேளையில் தரவரிசை தொடர் மற்றும் இன்விடேஷனல் போட்டிகளில் 2 கிலோ வரை சலுகையைப் பெறலாம். அதாவது போட்டியாளர் 50 கிலோ பிரிவில் போட்டியிட்டாலும் போட்டியின் நாளில் 52 கிலோ கூட இருக்கலாம். வினேஷுக்கு துரதிர்ஷ்டவசமாக, ஒலிம்பிக் விதிகள் கடுமையானவையாக அமைந்தன.
'மிகப்பெரிய சதி' – இந்திய குத்துச்சண்டை முன்னாள் வீரர் விஜேந்தர் சிங் கூறும்போது, ”வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது இந்தியாவுக்கும் இந்திய மல்யுத்த வீரர்களுக்கும் எதிரான மிகப்பெரிய சதி. வினேஷ் போகத்தின் விளையாட்டு செயல்பாடு மிகவும் பாராட்டத்தக்கது. சிலருக்கு அந்த மகிழ்ச்சியை ஏற்க முடியாமல் போயிருக்கலாம். 100கிராம் எடையில் என்ன பிரச்சினை இருக்கிறது?
அவரது வெற்றியால் யாருக்கோ சில பிரச்சினைகள் இருப்பதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு 100 கிராம் எடையைக் குறைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்றார்.