
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் வேளாண் நிலம் சார்ந்த வழக்குகளுக்கு தீர்வு காணாத அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
கடந்த 1958-ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் ஒருங்கிணைப்பு இயக்குநரகம் தொடங்கப்பட்டது. இதன் சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 5 உறுப்பினர்கள், அதிகபட்சம் 11 உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வேளாண் நிலம்சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த குழுக்கள் வாயிலாக தீர்வு காணப்படுகிறது.
விவசாய குடும்பத்தில் தந்தையின் காலத்துக்குப் பிறகு அவரதுவாரிசுகளிடையே வேளாண் நிலத்தை பங்கிடுவதில் பிரச்சினைகள் எழுகின்றன. இதேபோல விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுக்கும் விவகாரங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை தொடர்பாக ஒருங்கிணைப்பு இயக்குநரக குழுக்கள் மூலம் விசாரணை நடத்தி சுமுக தீர்வு எட்டப்பட்டு வருகிறது.
மேலும் கிராமங்களில் பாசன வசதி, சாலை வசதிக்கான இடங்களை தேர்வு செய்யும் பணியையும் ஒருங்கிணைப்பு இயக்குநரக குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன.
முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு வேளாண் நிலம் சார்ந்த வழக்குகள், பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண தீவிரம் காட்டி வருகிறார். இதன்படி பணியில் அலட்சியமாக, முறைகேடாக செயல்படும் ஒருங்கிணைப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கவுசாம்பி பகுதியில் வேளாண் நிலம் சார்ந்த பிரச்சினையில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட வேளாண் நில பிரச்சினைக்கு தீர்வு காணாத ஒருங்கிணைப்பு இயக்குநரக மூத்த அதிகாரிகள் ராஜ் கிரண், சிவந்த் சிங், சிவேஷ் சிங், ராம் ஆகியோர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்
மேலும் சில நாட்களுக்கு முன்பு, பணியில் அலட்சியமாக செயல்பட்டதற்காக ஜன்பூரைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு இயக்குநரகத்தின் 12 அதிகாரிகளின் ஊதியம் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ஒருங்கிணைப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் ஜி.எஸ்.நவீன் குமார் கூறியதாவது:
வேளாண் நிலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார். பணியில் அலட்சியமாக செயல்படுவது, லஞ்சம் வாங்குவது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
பணி நீக்கம்: இதன்படி 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் வேளாண் நிலம் சார்ந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறிழைத்த அதிகாரிகள் மீது பணி நீக்கம், பணியிடை நீக்கம், ஊதியத்தை நிறுத்திவைப்பது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. காவல் நிலையங்கள் மூலம் அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொதுவாக தனியார் நிறுவனங்களில் மட்டுமே ஊழியர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது பணி நீக்கம், பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதில்லை. தாங்கள் கண்காணிக்கப்படுவதை அரசு ஊழியர்கள் விரும்புவதும் இல்லை. பணியில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது மிகவும் அரிதாகும்.
இந்த சூழலில் உத்தர பிரதேசத்தில் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.