National

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4-வது முறையாக சம்மன் | Arvind Kejriwal summoned for fourth time in Delhi liquor policy case

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4-வது முறையாக சம்மன் | Arvind Kejriwal summoned for fourth time in Delhi liquor policy case


புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. கடைசியாக கடந்த ஜனவரி 3 ஆம் தேதி ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மாறாக அரவிந்த் கேஜ்ரிவால் இதுதொடர்பாக பேசினார். அப்போது அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுபானக் கொள்கை ஊழல் பற்றி நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரண்டு வருடங்களில் பாஜகவின் அனைத்து ஏஜென்சிகளும் பல ரெய்டுகளை நடத்தி பலரை கைது செய்தாலும் ஒரு பைசா ஊழலை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் ஊழல் நடந்திருந்தால், அத்தனை கோடிகளும் எங்கே போயின? பணமெல்லாம் காற்றில் மாயமாகிவிட்டதா?. ஊழல் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

மதுபானக் கொள்கை வழக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடியாத வகையில் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. பாஜக இப்போது என்னைக் கைது செய்ய விரும்புகிறது. எனது மிக முக்கியமான சொத்து, மூலதனம், பலம் அனைத்துமே எனது நேர்மைதான். ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், சட்டவிரோத சம்மன்களை அனுப்புவதன் மூலமும் பாஜக என்னை இழிவுபடுத்த விரும்புகிறது, என் நேர்மையைக் கெடுக்க விரும்புகிறது.

எனக்கு அனுப்பிய சம்மன்கள் சட்டவிரோதமானது என்று எனது வழக்கறிஞர்கள் என்னிடம் கூறியுள்ளனர். அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களுக்கு விரிவான விளக்கத்தை அனுப்பியிருக்கிறேன். ஆனால், ஒரு வாதத்திற்கு கூட அமலாக்கத் துறை அதற்கு பதிலளிக்கவில்லை. இந்தப் போலி வழக்கில், பல ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர், தொடர்ந்து சிறையில் அடைத்து வருகின்றனர். அவர்களில் யாருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை. யாருக்கு எதிராகவும் அவர்களால் எதையும் நிரூபிக்க முடியவில்லை.

எனவே அவர்களின் சட்டவிரோத சம்மன்களை நான் மதிக்க வேண்டுமா?. பாஜகவின் நோக்கம் நியாயமான விசாரணை அல்ல. மாறாக அரசியல் மிரட்டல். ஆம் ஆத்மி கட்சியை லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதே. விசாரணை என்ற பெயரில் என்னை அழைத்து, பின்னர் என்னை கைது செய்ய விரும்புகிறார்கள். அப்படி செய்தால் நான் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாது அல்லவா. அதுவே பாஜகவின் நோக்கம்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று 4வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி: டெல்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.


இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதுவரை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் முதல்வர் கேஜ்ரிவால் மூன்று சம்மன்களுக்கும் ஆஜராகாததால் அவர் கைது செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *