ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் நேற்று அதிகாலை நடந்த தீ விபத்தில் 5 படகு இல்லங்கள் 3 குடிசைகள் தீப்பிடித்து எரிந்தன.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி பிரபல சுற்றுலாதலமாக விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக படகு இல்லங்கள் பல இயக்கப்படுகின்றன. இதில் அனைத்து வசதிகளும் இருக்கும். சுற்றுலா பயணிகள் இதில் தங்குவது வழக்கம்.
இந்த படகு இல்லங்கள் தால் ஏரியின் 9வது படித்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இங்கு நேற்று காலை 5.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த படகு இல்லங்களுக்கு பரவியது. மொத்தம் 5 படகு இல்லங்கள் மற்றும் 3 குடிசைகள் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும், அருகில் இருந்த படகுகளை, படகோட்டிகள் வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றனர். இதனால் அந்த படகுகள் தீ விபத்தில் இருந்து தப்பின.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் படகு இல்லங்களில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். இதன் மூலம் தீ மற்ற படகு இல்லங்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. படகு இல்லங்களில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் சிலரையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். இந்த தீ விபத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.