Cinema

‘வேள்பாரி’ 3 பாகமாக உருவாகும்! – இயக்குநர் ஷங்கர் பேட்டி | director shankar interview

‘வேள்பாரி’ 3 பாகமாக உருவாகும்! – இயக்குநர் ஷங்கர் பேட்டி | director shankar interview
‘வேள்பாரி’ 3 பாகமாக உருவாகும்! – இயக்குநர் ஷங்கர் பேட்டி | director shankar interview


பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் ‘இந்தியன் 2’, நாளை வெளியாகிறது. ஐந்து வருட உழைப்பை மொத்தமாக வாங்கியிருக்கும் இந்தப் படத்துக்கு அதிகமாகவே இருக்கிறது எதிர்பார்ப்பு. ‘இந்தியன் தாத்தா’ கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, விவேக், சமுத்திரக்கனி என பெரும் நட்சத்திரங்கள் கொண்ட படம். புரமோஷன் பரபரப்பில் இருந்த இயக்குநர் ஷங்கரிடம் பேசினோம்.

‘இந்தியன் 2’ பெரிய உழைப்பை வாங்கியிருக்குதே…

எந்த விஷயம் என்னை தொந்தரவு பண்ணுதோ, அதை படமா பண்ணணும்னுதான் எப்போதும் நினைப்பேன். ஒரு ஆடியன்ஸா உட்கார்ந்து, அவங்க ரசிக்கற மாதிரி எப்படி கொடுக்கிறதுன்னு பார்ப்பேன். அதை மனசுல வச்சு, சின்சியரா எழுதறேன். அப்படித்தான் இந்தப் படமும். எந்தப் படத்துக்கும் வராத கஷ்டம் இந்தப் படத்துக்கு வந்தது. அதை கடந்து போயிதானே ஆகணும். இந்தப் படத்துல கமல் சார், மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள்னு எல்லோரோட உழைப்பும் அதிகம். அதனால அந்த கஷ்டங்களைத் தாண்டி மக்கள் ரசிப்பாங்க அப்படிங்கறது சந்தோஷமா இருக்கு.

மூன்று பாகம் எடுக்கணும்னு முதலிலேயே முடிவு பண்ணிட்டீங்களா?

இல்லை. ‘இந்தியன்’ பண்ணும்போது 2-ம் பாகம் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை. முதல் பாகம் பார்த்தீங்கன்னா, அதுவே 3 மணி நேரத்துக்கு மேல இருக்கும். அவ்வளவு பெரிய கதை. இரண்டாம் பாகம் வரும்போது, கதையை இந்தியா முழுவதும் நடக்கிற மாதிரிஉருவாக்கினோம். ஷூட் பண்ணி எடிட் பண்ணும்போது, பொதுவா சில காட்சிகளை வெட்டி எறிவோம், சுருக்குவோம், இந்தப்படத்துல எதையும்குறைக்க முடியாதுன்னு தோணுச்சு. அதைஇந்தக் கதை அனுமதிக்கலை. அப்ப அதுல இன்னொரு பார்ட் இருக்குங்கறதை என்னால உணரமுடிஞ்சுது. ரெண்டு பார்ட்டுமே, ஒரு தொடக்கம், அதுக்கான உள்ளடக்கம், கிளைமாக்ஸ்னுசரியா இருந்தது. அதனால அது தானாகவே இன்னொரு பார்ட்டை எடுத்துக்குச்சு. அதுக்கு என்னபண்ணணுமோ அதை பண்ணியிருக்கோம்.

உங்க படத்துல பாடல் காட்சிக்கான லொகேஷன் தனித்துவமா இருக்கும். அப்படி ஏதும் இந்தப் படத்துல இருக்கா?

இருக்கு. காலண்டர் பாடல். காலண்டர் ஷூட்னா, இதுக்கு முன்னால கடற்கரை ஓரங்கள்ல பண்ணியிருக்காங்க. சில படங்கள்ல இது வந்திருக்கு. நாம எப்படி பண்ணலாம்னு பார்க்கும்போது பொலிவியாவுல பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். அங்க பிப்ரவரி மாதம் மட்டும் மழை பெஞ்சு, கடற்கரையில அரை அல்லது ஒரு அடியில தண்ணீர் நிற்கும். அப்ப, மைல் கணக்குல ‘மிர்ரர் எபெக்ட்’ கிடைக்கும். அதை பார்க்கிறதுக்கே அழகா இருக்கும். அதுல ஷூட் பண்ணலாம்னு முடிவு பண்ணி போனோம். அது அவ்வளவு ஈசியா இல்லை. அங்க யாரும் சினிமா ஷூட் பண்ணினதே இல்லை. ஆறு, ஏழு நாள் கஷ்டப்பட்டு ஷூட் பண்ணியிருக்கோம். சவாலான விஷயம்தான். அந்த விஷுவல் மிரட்டலா இருக்கும்.

இந்த படத்துக்கு 3 பேர் வசனம் எழுதியிருக்காங்க. சுஜாதாவை மிஸ் பண்றோம்னு நினைக்கிறீங்களா?

உண்மைதான். பெரிய இழப்புதான். அவர் இல்லைங்கறதால வேற எழுத்தாளரோட பயணிக்க வேண்டியதுதான். ஜெயமோகன் சிறந்தஎழுத்தாளர். அவர் கூட ‘ 2.0’ பண்ணினேன். பிடிச்சிருந்தது. இந்த பக்கம் மகாபாரதம் எழுதறார், அந்த பக்கம் சயின்ஸ் பிக்சன் எழுதறார். வெரைட்டியா அவரால எழுத முடியுது. அதனால அவர் ஒரு வெர்ஷன், கபிலன்வைரமுத்து, லஷ்மி சரவணகுமார் ஒவ்வொரு வெர்ஷன் எழுதினாங்க. அதில இருந்து ஃபைனலா நான்ஒரு வெர்ஷன் எழுதினேன். இது ரொம்ப ஆரோக்கியமா இருக்கு.

முத்துராஜ் அமைச்ச செட் பற்றி சிலாகிச்சு பேசறாங்களே…

உண்மைதான். இந்தப் படத்துக்காகப் போடப்பட்ட கோல்டு செட் பற்றி கேள்விப் பட்டிருப்பீங்க. நம்ம கற்பனையை அவர்கிட்ட சொல்லும்போது, முத்துராஜ் அதுல வேறொரு பிரம்மாண்டத்தை கொடுக்கிறார். இந்தியாவுல இருக்கிற சிறந்த ஆர்ட் டைரக்டர் அவர். என்ன சொன்னாலும் அவ்வளவு நேர்த்தியா பண்ணுவார். ‘பீரியட் செட்’ ஒண்ணு போட்டிருக்கார். அதை ‘இந்தியன் 3’ல பார்க்கலாம். ரொம்ப பிரம்மாதமா பண்ணியிருக்கார். அவரோட உழைப்பு படத்துக்கு பெரிய பிளஸ்.

இந்தப் படத்துக்காக, முதன்முறையா செகண்ட் யூனிட் இயக்குநர்களை பயன்படுத்தியிருக்கீங்களே?

ஆமா. இந்தியா முழுவதும் ஷூட் பண்ண வேண்டியிருந்தது. ஒரு சின்ன காட்சியா இருந்தாலும் அதுல ஏகப்பட்ட ஷாட்ஸ் தேவைப் பட்டது. அதை நான் ஒருத்தனா பண்றது கஷ்டம். அதுமட்டுமில்லாம செகண்ட் யூனிட் டைரக்டர்ங்கறது ஹாலிவுட்ல ரொம்ப சகஜம். இந்தியிலயும் பண்றாங்க. நான் முதல் முறையா பண்ணினதால இது கேள்வியா வருதுன்னு நினைக்கிறேன். என் படங்கள்ல சின்ன ஷாட் அப்படின்னாலும் நான்தான் எடுப்பேன். இதுக்கும் அப்படி எடுத்தேன்னா, இன்னும் 2 வருஷம் ஆயிரும். அதனால சீக்கிரம் முடிக்கணுங்கறதுக்காக, வசந்தபாலன், அறிவழகன், சிம்புதேவன்கிட்ட உதவி கேட்டேன். அவங்க பிசியா இருந்தாலும் என் மேல இருக்கிற மரியாதைக்காக வந்து பண்ணிக் கொடுத்தாங்க. அவங்களுக்கு நன்றி சொல்லணும்.

ஒரே நேரத்துல, இந்தியன் 2, 3, கேம் சேஞ்சர்னு 3 படங்கள்ல வொர்க் பண்ணியிருக்கீங்க…வேற யாரும் இப்படி பண்ணியிருப்பாங்களான்னு தெரியலை. எப்படி சாத்தியமாச்சு?

இல்ல. நிறைய பண்ணியிருக்காங்க. இதுபற்றி கேட்கும்போது, தாசரி நாராயணராவ், கே.பாலசந்தர் பண்ணியிருக்காங்கன்னு கமல் சாரே சொல்லிருக்கார். நான் வழக்கமா ஒரு படம் முடிஞ்சதுக்கு பிறகுதான் இன்னொரு படத்துக்கு போவேன். இந்தப் படத்துக்கு என்னனா, ‘இந்தியன் 2’ ஆரம்பிக்குமா, ஆரம்பிக்காதா அப்படிங்கற சூழ்நிலை ஒரு கட்டத்துல இருந்துச்சு. சரி அடுத்த படம் பண்ணலாம்னு ‘கேம் சேஞ்சர்’ ஆரம்பிச்சேன். அதை ஆரம்பிச்சதும் இதையும் ஆரம்பிக்க வேண்டிய நிலைமை வந்துச்சு. அப்படியொரு சூழ்நிலை வந்ததால பண்ண வேண்டியதாயிடுச்சு. சவாலா எடுத்துக்கிட்டேன்.

உங்களோட வேற எந்த படங்களை அடுத்த பாகம் பண்ற ஐடியா இருக்கு?

பொதுவா ஒரு படம் பண்ணும்போது, அதுஎன்ன கதை, அதுல என்ன சொல்ல வர்றாங்கன்னு பார்வையாளர்கள்கிட்ட ஒரு ‘எக்ஸைட்மென்ட்’ இருக்கும். ஆனா, ஒரு படத்தோட இன்னொரு பாகம் பண்றீங்கன்னா, அந்த கதாபாத்திரம் என்ன பண்ணும்? அது என்ன கதை?ன்னு எல்லாமே அவங்களுக்கு தெரியும். அதனால அதை சரியா பண்றது கஷ்டம். அதையும் மீறி, ஒரு விஷயம் சொல்லணும்னு மனசுல தோன்றிக்கிட்டே இருக்கும்போது, அதை நான் பண்றேன். மற்றபடி என் வேற படங்களை அடுத்த பார்ட் எடுக்கும் ஐடியா இல்லை.

தெலுங்கு இயக்குநர்கள் தமிழ் ஹீரோக்களை வச்சு படம் பண்றாங்க, தமிழ் இயக்குநர்கள் அங்க போய் பண்றாங்க… இந்தச் சூழல் பற்றி என்ன நினைக்கிறீங்க?

நல்ல விஷயம்தான். எல்லாமே ஒரு குடைக்குள்ள வந்துடுச்சுன்னா, அது இன்னும் ஆரோக்கியமா இருக்கும். இந்திய சினிமாங்கறது பெரிய துறை. இந்த இண்டஸ்ட்ரி மாதிரி, உலகத்துல எங்கேயுமே கிடையாது. எவ்வளவு படங்கள், எவ்வளவு படைப்பாளிகள், எவ்வளவு திறமையான டெக்னீஷியன்கள் எல்லாம் கலக்கும் போது, இந்திய சினிமா இன்னும் ஆரோக்கியமா ஆகற சூழல் உருவாகும்.

‘வேள்பாரி’ கதையை படம் பண்ணப்போறதா செய்திகள் வந்துச்சே?

அந்தக் கதையை நிறைய பேர் என்னை படிக்கச் சொன்னாங்க. அந்த நேரத்துல எனக்கு நேரம் கிடைக்கலை. கரோனா வந்ததுக்குப் பிறகு வீட்டுல சும்மா இருந்த நேரத்துல படிக்கலாம்னு ஆரம்பிச்சேன். படிக்கப் படிக்க எனக்குக் காட்சிகளா விரிந்தது மனசுல. படிச்சு முடிச்சதுமே இதை எப்படியாவது படமா பண்ணணும்னு தோணுச்சு. உடனே அதை எழுதிய சு.வெங்கடேசன்கிட்ட பேசி, அதுக்கான ரைட்ஸ் வாங்கி , 3 பார்ட்டாக திரைக்கதை எழுதி முடிச்சுட்டேன். ரெடியா இருக்கு. யார் நடிக்கிறாங்க அப்படிங்கறதை முடிவு பண்ணலை.

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *